உலக உணவு தினத்தை பூரண மன நிறைவுடன் கொண்டாட முடியவில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் ஏறத்தாழ 82 கோடிபேர் போதுமான உணவின்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். 15 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் உணவு பற்றாக்குறையால் உடல் வளர்ச்சியின்றி குன்றியிருக்கிறார்கள். இது அவர்களது நிகழ்காலத்தை மட்டுமல்லாமல் எதிர்காலத்தையும் இருளவைத்துவிடும்.
இது ஒருபுறம் இருக்க உணவு வீணடிப்பு மற்றொரு புறம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உணவை வீணாக்கமாட்டேன் என்று ஒவ்வொருவரும் இந்த உணவு தினத்தன்று பிரதிக்ஞை ஏற்கவேண்டும்.
மூங்கில் பல்வேறு பயன்பாடுகளை கொண்டுள்ளது. சர்வதேச அளவில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மூங்கில் வகைகள் உள்ளன. நம் பாரதத்தில் சுமார் 200 வகையான மூங்கில்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் மேற்கு வங்காளம் ஒடிசா, ஆந்திரா, மஹாராஷ்ட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மூங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழையடி வாழையாக வாழ்க, மூங்கில்
போல் சுற்றம் முறியாமல் வாழ்க என மணமக்களை வாழ்த்தும் மரபு இப்போதும் காணப்படுகிறது. இதற்கு வலுவான காரணம் உள்ளது. வாழையும் மூங்கிலும் ஒன்றிலிருந்து ஒன்றாக கிளைத்து புதர்போல நெருங்கி வளர்பவை. இவை காலங்காலமாக தொடர்ந்து நீடிப்பவை. இதனால்தான் திருமண விழாக்களின்போது மூங்கில் பந்தல்கால் நடுவதும் வாழைமரம் கட்டுதலும் தவறாமல் இடம் பெறுகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த மரம் மூங்கில். இது விருட்சம் என்று குறிப்பிடப்பட்டாலும் தாவரவியல் வகைப்பாட்டின்படி புல்வகையைச் சேர்ந்ததுதான். வெகு வேகமாக வளர்ந்தோங்கும் இயல்புடைய மூங்கில், அதிக அளவில் பிராண வாயுவை வெளியிடுகிறது. யானைகளுக்கு மிகவும் பிரியமான உணவு மூங்கில்தான். வேறு பல விலங்கினங்களுக்கும் மூங்கில் முக்கிய உணவாக உள்ளது.
மூங்கில் குருத்து சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது வடகிழக்கு மாநில மக்களின் விருந்தோம்பலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வனப்பகுதியில் வாழும் மக்கள் மூங்கில் அரிசியை பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டிலுள்ள வனப்பகுதிகளிலும் குறிப்பாக கிருஷ்ணகிரி காட்டுப்பகுதிகளில் மூங்கில் அரிசி நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மூங்கில் அரிசியில் மக்னீசியம், காப்பர், சிங்க் போன்ற சத்துகள் செறிவாக உள்ளன.
உடலுக்கு ஊட்டமளிப்பதில் மூங்கில் அரிசிக்கு இணை எதுவும் இல்லை என்று சித்த மருத்துவர்கள் உறுதிபட உரைக்கிறார்கள். சத்துணவு, அநேகமாக எல்லா மாநிலங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மாதம் ஒருமுறையாவது மூங்கில் சோற்றை குழந்தைகளுக்கு வழங்குவது விரும்பத்தக்கது. இதை வாரம் ஒருமுறை என பிறகு விரிவாக்கிக் கொள்வது சாலச்சிறந்தது.