பிரச்சினைக்குரிய ‘மாதொருபாகன்’ எழுதிய பெருமாள் முருகனுக்கு ஆதரவாக களம் இறங்கிய முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பு, ஒரு சமூகத்தை எவ்வளவு கொச்சைப்படுத்தினாலும், அது எழுத்தாளரின் சுதந்திரம் என பேசுவது அபத்தமானது. இவர்கள் எல்லோரும் ஹிந்துக்களின் வாழ்வியல் பற்றிய நெறிமுறைகளை கொச்சைப்படுத்தும் காரியங்களில் ஈடுபடும்போது, எழுத்தாளர்களின் கருத்து சுதந்திரம், எழுத்தாளரின் உரிமை என்று பேசுவதும் சிறுபான்மை மதத்தினரின் நெறிமுறைக்கு மாறாக எழுதினால் அது கடுமையாக கண்டிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இவர்களின் கருத்து சுதந்திரம் எவ்வாறு சின்னாபின்னமாகியது என்பதை கவனிப்போம்.
* 1986ம் வருடம் டிசம்பர் மாதம் பெங்களூருவிலிருந்து வெளிவரும் ‘தி டெக்கான் ஹெரால்ட்’ எனும் ஆங்கில பத்திரிகை ஞாயிறு மலரில் –Mohammad the Idiot என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இந்தக் கட்டுரை முஸ்லிம்களின் மனதை புண்படுத்திவிட்டது எனக் கூறி, 5,000க்கும் அதிகமான முஸ்லிம்கள், பத்திரிகை அலுவலகத்தின் உள்ளே நுழைந்து அலுவலகத்துக்கு தீ வைத்தார்கள். அங்குள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கட்டுரை எழுதியவர் நான் முகமது நபியை குறித்து எழுதவில்லை எனக் கூறிய பின்னரும் கூட, முஸ்லிம்கள் வெறியாட்டத்தை நடத்தினார்கள். இதன் காரணமாக நடந்த துப்பாக்கி சூட்டில் நால்வர் கொல்லப்பட்டார்கள், ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். இதை கண்டிக்கத் தவறிய முற்போக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையின் மீது குற்றம் சுமத்தினார்கள்.
* ‘கன்னட பிரபா’ பத்திரிகையின் ஒரு இதழான ‘சப்திகா பிரபா’ என வார மலரில் தஸ்லிமா நஸ்ரீன் எழுதிய Purdah hai purdah என்ற கட்டுரையை பிரசுரித்ததால், கலவரம் மூண்டது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டார்கள். இந்தக் கட்டுரை ஏற்கனவே ஆங்கிலத்தில் சிந்து (Sindhu) என்ற பெயரில் வெளிவந்தபோது மௌனமாக இருந்த முஸ்லிம்கள் கன்னடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி பலர் காயமடைய காரணமாக இருந்தார்கள். இந்தக் கட்டுரையை பற்றி உருது பத்திரிகையான Siasatல் வெளிவந்த பின்னர் தான் வெறியாட்டம் துவங்கியது. இந்த பத்திரிகையின் ஆசிரியர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த Roshan Baig. இன்று எழுத்தாளர்களின் சுதந்திரம் எனப் பேசும் இவர்கள், அன்றைக்கு எங்கே போனார்கள் என தெரியவில்லை.
* சல்மான் ருஷ்டி எழுதிய ‘சாத்தானின் கவிதைகள்’ (Satanic Verses) என்ற புத்தகத்திற்கு இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு முன்பே தடை விதிக்கப்பட்டது. 1989ல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட நாவல். வெளியிடப்
பட்டவுடன் சில தினங்களிலேயே ஈரான் அதிபர் அயதுல்லா கொமனி, புத்தகத்திற்கு தடை விதித்தது மட்டுமல்லாமல், சல்மான் ருஷ்டியை கொல்பவர்களுக்கு ஆறு லட்சம் டாலர் பரிசாக வழங்கப்படும் என பத்வா அறிவித்தார். 1989ல் இந்தியாவில் வட மாநிலங்களில் பல இடங்களில் கலவரம் நிகழந்த சமயம், நாடாளுமன்ற உறுப்பினர் சையது சஹாபுதீன் இந்த புத்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியிடம் முறையிட்டார். உடனடியாக ராஜீவ் காந்தி தடை விதித்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், புத்தகத்தை தடை விதிக்க வேண்டும் என கோரிய சையது சஹாபுதீனும், ராஜீவ் காந்தியும் படிக்காமலேயே, முஸ்லிம்களின் வாக்குகளை மட்டுமே மனதில் நிறுத்தி, உடனடியாக தடை விதிக்கப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் ‘சாத்தானின் கவிதைகள்’ புத்தகத்திற்கு தடை விதித்த நாடு இந்தியா தான்.
இந்தப் புத்தகத்திற்கு தடைவிதித்த போது முற்போக்கு எழுத்தாளர்கள் என கூறிக்கொள்ள இடதுசாரி சிந்தனையாளர்கள் எவரும் அரசிடம் கேள்வி கேட்கவில்லை.
* Understanding Islam through Hadis என்ற தலைப்பில் ராம் ஸ்வருப் என்பவர் எழுதிய புத்தகத்திற்கும் ஏன் தடைவிதிக்கப்பட்டது என்பதை குறிப்பிடாமல் தடை விதிக்கப்பட்டது. 1982ல் அமெரிக்காவில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. அப்துல் ஹமீத் சித்தகி என்பவர் எழுதிய Sahih Muslim புத்தகம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. 1983ல் ராம் ஸ்வரூப் நண்பரான சீத்தாராம் கோயல் என்பவர் மறுபதிப்பு வெளியிட்டார். அனைத்து புத்தகங்களும் விற்பனையாகி விட்டன. 1987ல் மேற்படி ஆங்கில நூலை இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிட முயன்ற சமயத்தில் தான் பிரச்சினை துவங்கியது. சில முஸ்லிம்கள் புகார் கொடுத்ததின் விளைவாக சீத்தாராம் கோயல் கைது செய்யப்பட்டு, அனைத்து புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது சம்பந்தமாக ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்பின் வார இதழான Radiace-ல், மேற்படி புத்தகம் இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு புறம்பாக இருக்கிறது என்றும் இதன் காரணமாக முஸ்லிம்கள் கொந்தளிப்பில் இருப்பதாகவும் எழுதியது. மறைமுகமாக வன்முறையை தூண்டும் விதமாக அமைந்தது. இதன் பின்னர் தான் 1990ல் ஹிந்தி பதிப்பிற்கும், 1991ல் ஆங்கில பதிப்பிற்கும் முழு தடைவிதிக்கப்பட்டது. 1982ல் வெளியிடப்பட்ட புத்தகத்திற்கு நிர்பந்தம் காரணமாகவே 1990 மற்றும் 1991ல் தடை விதிக்கப்பட்டது.
(முற்போக்கு எழுத்தாளர்கள் மாதொருபாகன் நாவலுக்கு வைக்கும் காரணம், இந்தப் புத்தகம் நான்கு பதிப்பு வெளியாகிவிட்டது. அப்பொழுது எழும்பாத பிரச்சினை இப்போது ஏன் எழுகிறது என்ற வாதத்தை, ராம் ஸ்வரூப் எழுதிய புத்தகத்திற்கு எட்டு ஆண்டுகள் கழித்து தடை விதிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வியை எழுப்பியிருப்பார்களா? )
* இறுதியாக தஸ்லிமா நஸ்ரீன் எழுதிய ‘லஜ்ஜா’ என்ற நாவலுக்கு தடை விதிக்கப்பட்டது மட்டுமில்லாமல், பங்களாதேஷ் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டதை எதிர்த்து எவரும் குரல் கொடுக்கவில்லை. தஸ்லிமா நஸ்ரீன் எழுதிய Dwikhondito என்ற நாவலுக்கு தடை விதிக்க வேண்டும் என ஹஸ்மத் ஜலால் என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் . ‘ஒச்’ என்ற நாவலை எழுதியதற்கும் பங்களாதேஷ் நீதிமன்றத்தில் சயீத் சம்சூல் ஹக் என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த இரண்டு நாவல்களும் முஸ்லிம் மார்க்கத்தில் பெண்களின் அவல நிலையை எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது.
ஆகவே, கடந்த காலங்களில் தங்களை முற்போக்கு எழுத்தாளர்களாக காட்டிக் கொள்ளும் இடதுசாரிகள் மாதொருபாகனுக்கு வாங்கும் வக்காலத்து போலவே ஏன் மற்ற எழுத்தாளர்களின் நாவலுக்கு தடை விதிக்கும் போது வாய் மூடி மௌனியாக வலம் வந்தார்கள்.
ஒரு சமுதாயத்தை கேவலமாக சித்திரிக்கும் வக்கிர புத்தி கொண்ட எழுத்தாளருக்கு ஆதரவாக களம் இறங்கும் முற்போக்கு எழுத்தாளர்கள் தங்களது சமுதாயத்தை இவ்வாறு கொச்சைப்படுத்தினால் ஆதரவாக களம் இறங்குவார்களா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.