திருப்போரூர் முதல் திருநின்றவூர் வரை, ஆரம்பாக்கம் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை அடங்கிய மிகப்பெரிய சென்னை ஜில்லாவின் ஆர்.எஸ்.எஸ் செயலாளராக 14 ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டு சங்கப்பணியில் ஈடுபட்டவர் தற்போது ஆதம்பாக்கத்தில் வசித்துவரும் லட்சுமிநாராயணன். இந்த வார முன்னுதாரணமான ஸ்வயம்சேவகர் பகுதிக்காக அவரை சந்தித்தோம். அவரது அனுபவங்கள் வாசகர்களின் பார்வைக்கு:
லட்சுமிநாராயணன்ஜி மதுரையில் 1940ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி திருப்புடைமருதூர் வைத்தியநாதன், தேவநாயகி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தையாருக்கு வியாபாரம். 1951ம் வருடம் மதுரையில் 6ம் வகுப்பு படிக்கும்போது எம்.சி. உயர்நிலைப்பள்ளியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் கலந்து கொண்டார். அந்த ஷாகாவிற்கு வழக்கறிஞர் அண்ணாஜி என்கின்ற தட்சிணாமூர்த்தி, வழக்கறிஞர் விஸ்வநாதன்ஜி, ஜனா.கிருஷ்ணமூர்த்திஜி ஆகியோர் வருகை தருவது வழக்கம். இவர்களது தொடர்பினால் சங்கத்தில் தீவிரமான ஈடுபாடு காட்டினார். 1959ல் சென்னையில் தலைமைச் செயலகத்தில் வேலை கிடைத்து திருவல்லிக்கேணி கார்யாலயத்தில் தங்கிக் கொண்டே சங்கப் பணி செய்து வந்தார். 19௬௮ல் மாநகரப் பேருந்து ஊழியர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று நாட்கள் அடிதடி பிரச்சினையால் பேருந்துகள் இயங்காமல் இருந்த நேரத்தில் சங்க அதிகாரிகள் ஹன்ட்ரட் ஸ்ரீனிவாசன்ஜி, ஏ.பி.வி.பி வாசுதேவன்ஜி ஆகியோருடன் இவரும் சேர்ந்து மாணவர்களிடையே சமரசம் செய்ததுடன் ஊழியர்களுடைய பிரச்சினைக்கு முதல்வர் அண்ணாதுரையை தொடர்பு கொண்டு தீவிரத்தை உணர்த்தி மாணவர்களைச் சந்தித்து பேசச் செய்ததன் மூலம் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
1956ம் ஆண்டு சங்கத்தின் முதலாம் ஆண்டு பயிற்சி முகாமை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியிலும், 1961ம் ஆண்டு இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாமை கேரளாவின் நூரணியிலும் முடித்தார். 1962ம் ஆண்டு நாகபுரியில் மூன்றாமாண்டு. 1963 தொடங்கி, 1975 வரை எல்லா வருடாந்திர சங்க முகாம்களிலும் சிக்ஷக்காக சென்றுள்ளார். இதே ஆண்டுகளில் தொடர்ந்து சென்னை ஜில்லா செயலாளர் பணியையும் மேற்கொண்டுள்ளார். இவருக்கு 1972ம் ஆண்டு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விசாலாட்சி அம்மையாருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இவர்கள் டிஎம்இ படித்துள்ளனர். மகன்கள் இருவரும் சங்க முகாம் முடித்துள்ளனர்.
கன்னியாகுமரி விவேகானந்த பாறை நினைவு சின்னப் பணி தொடங்கியபோது அலுவலக பொறுப்பை கவனித்தார். சத்திரபதி சிவாஜி முடிசூட்டியதன் 300வது ஆண்டு விழா கமிட்டியில் துணைச்செயலாளராக செயல்பட்டுள்ளார். சம்ஸ்கார் பாரதி தொடங்கியபோது அதன் அகில பாரத தலைவரான மரியாதைக்குரிய பாபா யோகேந்திராஜியின் 75 வயது (அம்ரித மகோத்சவம்) விழாவை தலைமையேற்று நடத்தி 1 லட்சம் ரூபாயை அமைப்பு வளர்ச்சி நிதியாக வழங்கினார்.
சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்தின் அகில பாரத துணைத் தலைவராகவும் பொறுப்பில் இருந்தார். இவரது சங்கப் பொறுப்பு காலத்தில் நிர்வாக வசதிக்காக சென்னை ஜில்லாவை மூன்றாக பிரித்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு கிண்டிக்கு தெற்கே உள்ள பகுதிகள் பல்லாவரத்திலும், திருவொற்றியூர் பகுதிகள் எண்ணூர் பகுதியிலும் சென்னையைச் சேர்ந்தவர்கள் மெரினா கடற்கரையிலும் சந்தித்து மகர சங்கராந்தி விழாவைக் கொண்டாடினர். இதனால் சாதாரணமாக 150 பேர் திரண்ட சூழ்நிலையில் 400க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர்.
கார்யவாஹ் பொறுப்பிலிருந்த 14 ஆண்டுகளிலும் பரமபூஜனீய குருஜி அவர்களின் சுற்றுப்பயணம் காலத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரவேற்று தங்க வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்வதும், பின்னர் மீண்டும் அவரை வழியனுப்புவதும் இவரது பொறுப்பில் இருந்தது. அந்த தருணத்தில் ஒருமுறை ரயிலிலிருந்து இறங்கி குருஜி அவர்கள் காரில் ஏறியபோது யாசகர் ஒருவர் அவரிடம் தர்மம் கேட்டார். அப்போது குருஜி அவர்கள் அவருக்கு ஏதாவது கொடு என்று இவரைப் பணித்தார். இவர் தனது சட்டைப் பையில் இருந்த 10 காசு நாணயத்தை எடுத்து கொடுத்தார். அதைப்பார்த்த குருஜி 10 காசில் என்ன செய்ய முடியும்? கூடுதலாக கொடு என்று சொல்லியதும் பையிலிருந்த 1 ரூபாயை கொடுத்தார். கார் திருமயிலை நஞ்சப்பா ஜி இல்லத்திற்கு புறப்பட்டு சென்று விட்டது. தனது தங்குமிடத்திற்கு செல்ல கையில் காசின்றி திருவல்லிக்கேணி வரை நடந்தே பயணித்த அனுபவம் உண்டு.
2006ல் ஸ்ரீகுருஜி நூற்றாண்டு வந்தது. அந்த சமயத்தில் சங்க சார்பாக ‘தமிழகத்தில் ஸ்ரீகுருஜி’ நூல் வெளியிடப்பட்டது. அதை தொகுத்தவர் லட்சுமிநாராயணன்.
முதன் முதலாக சென்னையில் சமுதாயத்தில் செல்வாக்குமிக்க பெரியவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பணி ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி ஒருவரின் துணையுடன் ஏற்பாடு நடந்தது. தொழில் அதிபர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள் போன்றோர் அழைக்கப்பட்டிருந்தனர். பெரிய அளவு எண்ணிக்கையில் திரண்டனர். இதன் மூலம் அவர்களுக்கென தனியே வாராந்திர கூடுதல் ஏற்படுத்தப்பட்டது. அண்ணாஜி கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்தார். ”எமர்ஜென்சி காலத்தில் போராட்டம் என்ற தலைமறைவு சிற்றிதழ் விநியோகம் நடந்தது. சங்க செய்திகளை ஹன்ட்ரட்ஜி எழுதித் தருவார். தட்டச்சு செய்து சைக்லோஸ்ல்டை நகல் எடுத்தோம். மாம்பலத்தில் உள்ள பத்மநாபன் ஜி மூலம் ஒரு வீடு எடுத்து அங்கேயே தயார் செய்து கொடுத்தோம். அதற்கு மாம்பலம் முகுந்தன்ஜி பக்கபலமாக இருந்தார். 1975ல் சங்க தடை காரணமாக என்னைப் போலீஸ் தேடி நான் பணிபுரிந்த தலைமை செயலகத்தில் ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்த லட்சுமிநாராயணன் யார்? என்று விசாரித்ததன் காரணமாக எனது உயர் அதிகாரி அந்தப் பையன் ரொம்ப நல்ல பையன். அவனுக்கும் ஆர்ய சமாஜத்துக்கும் தொடர்பே கிடையாது என்று கூறி சிஐடியை திருப்பி அனுப்பி என்னைக் காப்பாற்றினார்”.
பணி ஓய்வுக்குப்பிறகு லட்சுமிநாராயணன் வக்கீல் படித்து விட்டு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். இது சங்கப்பணிக்கு அனுகூலமாக இருப்பதற்கு.
1990ல் ராம ஜென்ம பூமி போராட்டத்தில் கரசேவைக்கு ஆட்களை அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தார் லட்சுமிநாராயணன். கடைசிக்கு முந்தைய குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் மாணிக்பூர் பகுதியில் ரயிலில் சென்ற 600 பேரை இறக்கி போலீஸ் கைது செய்து அருகில் உள்ள பஞ்சாயத்து போர்டு அலுவலகத்தில் சிறை வைத்தது. அந்த சமயத்தில் காசியில் நடைபெறுகின்ற பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியதிருந்ததால் லட்சுமிநாராயணன் தலைமையில் அங்கிருந்து 9 பேர் குழு தப்பியது. போலீஸ் விரட்டியபோது அருகில் இருந்த மத்தியப் பிரதேச மாநில சம்பல் பள்ளத்தாக்கில் டபேரா ஊரில் பதுங்கினர். இதனால் உத்தரப் பிரதேச போலீஸ் இவர்களை கைது செய்ய முடியவில்லை. போலீஸ் சென்றதும் காசிக்குச் சென்று அங்கு நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டனர். இன்றும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தன்னால் முடிந்த அளவுக்கு சங்கப் பணியினை செய்து இன்றைய இளைய கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் லட்சுமிநாராயணன்.