பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் சேர்ந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதுமே போராட்ட களமாக்கினார்கள். பிரதமர் மோடியின் முயற்சியால் அந்தப் போராட்டம் பிசுபிசுத்தது. அதில் தோல்வி கண்டவர்கள் மீண்டும் நீட் பிரச்சினையைக் கையில் எடுத்தார்கள். நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகளாலும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கையாலும் அந்தப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டது. தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நக்ஸல் தொடர்புடைய கல்லூரி மாணவி வளர்மதி, திருமுருகன் காந்தி உள்பட 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் தள்ளினார்கள். அவர்களை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. தேச விரோத, பிரிவினைவாத கருத்துக்களை பரப்புவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்போது நீதிமன்றமும் அரசு நடவடிகைகளுக்கு சட்டத்தின்படி முழு ஆதரவு கொடுத்தால் நல்லது.
தமிழக அரசின் சார்பாக தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாக்களில் கூட்டத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக அதிகாரிகள் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி பங்கேற்க வைக்கிறார்கள். இதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு தடை விதித்துள்ளார்.
சபாஷ்.. பாராட்டப்பட வேண்டிய தீர்ப்பு!
அடுத்து புதிய வாகனம் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வயதான பெரியவர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள் பலருக்கு கார் ஓட்டத் தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தாலும் வயதின் காரணமாக ஓட்ட இயலாது. எனவே இந்த உத்தரவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வாகனங்கள் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு பெரும்பாலான மக்களுக்கு எரிச்சலூட்டியது என்பது உண்மைதான். என்றாலும் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருப்பது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் இல்லை. அது தொலைந்து போனால் உடனடியாக புதியது வாங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்து கொடுத்தால் நல்லது.