சென்னை மெரீனாவில் சிறு பொறியாக துவங்கிய ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக மாறியது. ஜல்லிக் கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் வாடிவாசல் திறக்க வேண்டும் என்று ஒன்றுப்பட்ட போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கை அவசர சட்டத்தின் மூலம் நிறைவேறிய பின்னரும், போராட்டங்களை கைவிட மறுத்து, தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவித்த போதே, போராட்டக் களம் மாணவர்கள் கையிலிருந்து சமூக விரோதிகளின் கைகளுக்கு மாறியது.
தங்களின் போராட்டத்திற்கு ஆட்சியாளர்களும் காவல் துறையினரும் முழு ஆதரவு கொடுத்த நிலை தொடரவே, மெரீனாவில் நுழைந்த தேச விரோத சக்திகள், அவசர சட்டம் மட்டும் போதாது, நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும், என கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து அரசை நிர்பந்தப்படுத்தினார்கள். இந்த கோரிக்கை முழுமையாக நிறைவேறும்வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்கள். இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்பதாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விஷ வித்தை விதைத்து போராட்ட நெருப்பை பற்ற வைத்துக் கொண்டே இருந்தார்கள்.
அவசர சட்டம் கொண்டு வந்த பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியது, ‘காணவில்லை காணவில்லை ஓ.பி.எஸ்ஐ காணவில்லை’ என்ற கோஷங்களையும் எழுப்பினார்கள். தேசியக் கொடி எரிக்கப்பட்டது, வெளிப்படையாகவே தனித் தமிழ்நாடு பிரிவினை கோஷங்களை முழங்கியது. மாணவர்களை முன்நிறுத்தி பிரிவினைவாதிகள், பயங்கரவாத அமைப்பினர், ஆட்சிக்கு வர வேண்டும் என சதியில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை திசை திருப்பினார்கள். கலவர பூமியாக மெரீனா கடற்கரை மாறியது. மெரீனாவை ஒட்டியுள்ள திருவல்லிக்கேணி பகுதி எரியத் தொடங்கியது.
இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற முதலில் உள்ளே நுழைந்து குழப்பத்தை விளைவித்தவர்கள் மே 17 இயக்கத்தினர். இவர்களைத் தொடர்ந்து தி.மு.கவின் மாணவர் அமைப்பினர், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், நாம் தமிழர் இயக்கத்தினர், விடுதலை சிறுத்தை இயக்கத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் அமைப்பினர் என இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் உள்ளே நுழைந்து, போராட்டத்தை தீவிரப்படுத்தியதால் ஏற்பட்ட கலவரம். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் கிடையாது என்பதற்கு ஊடகங்கள் வெளியிட்ட காட்சிகளே சாட்சி.
அமைதியாக நடந்த போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரிவினைவாத, தேச விரோத சக்திகள், மொத்த விஷுவல் மீடியாவையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். போராட்டத்தை லைவ் செய்யாவிட்டாலும் கூட, மெரீனாவில் ஓ.பி.வேன்கள் நிற்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். சர்வாதிகார நாட்டில் நடப்பது போன்ற ஒரு சூழ்நிலையை ஊடகத்திற்கு குறிப்பாக டி.விகளுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.
ஆண்டுதோறும் விநாயர் சதுர்த்தி விழாவின் போது, திருவல்லிக்கேணி பகுதி எப்படிப்பட்ட பகுதி என்பது காவல் துறையினருக்கு நன்கு தெரியும். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதிகமாக வாழும் பகுதி. காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசிய போராட்டக்காரர்கள் ஏற்கனவே போராட்டத்தின் தன்மையை புரிந்துகொண்டு பெட்ரோல் குண்டுகளை தயார் நிலையில் வைத்திருந்தார்கள். சில மாதங்களுக்கு முன் தேசிய புலனாய்வு அமைப்பினர் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பினரை கைது செய்து விசாரணை செய்தபோது, மிகப் பெரிய கலவரத்தை தொடங்க திட்டமிட்ட செய்தி வெளி வந்தது. மேலும், மத்திய உளவுத் துறையினரின் தகவலின் படி, மெரீனாவில் மனித வெடிகுண்டு வெடிக்கச் செய்ய திட்டமிட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாணவர்களை காவல் துறையினர் எச்சரிக்கை செய்தபோது, கூட்டத்திலிருந்து சமூக விரோதிகள் மாணவர்களை பயன்படுத்தி கலவரத்தை தொடங்க திட்டமிட்டார்கள்.
காஷ்மீரத்தில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசும் அதே போராட்ட முறை மெரீனாவிலும் தென்பட்டது என்பதை கவனித்தால் கலவரத்தை உருவாக்கியவர்களின் பின்னணி என்ன என்பது நன்கு தெரியும். போராட்டத்துடன் தொடர்பே இல்லாதவர்கள் ஒவ்வொரு தெருமுனையிலும் அணிதிரட்டப்பட்டு கலவரத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டார்களே, அவர்களை தூண்டிவிட்டது யார் என்ற கேள்வியும் எழுகிறது. இதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல், மாணவர்கள் மீது நடத்திய தடியடிக்கு கண்டனம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், கலவர பூமியாக மாற்றிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் கோரிக்கை வைக்கவில்லை?
கோவையில் கூட மாணவர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தில் தி.க.வின் ஒரு பிரிவினர், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர், மாவோயிஸ்ட் அமைப்பினர், அல்உம்மா, கு.ராமகிருஷ்ணனின் தி.க. போன்ற அமைப்பினர்கள் உள்ளே புகுந்ததாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். சனிக்கிழமை அவசரச் சட்டம் இயற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியானதுமே, வ.உ.சி மைதானத்தில் பாதிப் பேர் வெளியேறத் தொடங்கினார்கள். ஆகவே, போராட்டம் முடிந்தது என நினைத்துதான் பெரும்பாலான இளைஞர்கள் வெளியே வந்தார்கள். ஆனால் நிரந்தர தீர்வு வேண்டும் என கோரி ஒருபிரிவினர் குறிப்பாக மாணவர்களாக இல்லாதவர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள்.
கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில், நிரந்தர தீர்வு வேண்டும் என போராட்டத்தை தொடர்ந்தவர்களுக்கு உத்தரவுகளும் வழிகாட்டுதல்களும் வேறு எங்கோ இருந்து கண்ணுக்கு புலப்படாத நபர் மூலம் மொபைலில் வந்து கொண்டிருந்தன. இவ்வாறு வந்த தகவல்களின் அடிப்படையில், முக்கியமாக கோஷங்கள் முதல் கொண்டு மேற்படி இடத்திலிருந்து வடிவமைக்கப்பட்டு வந்ததைத் தான் கூட்டத்தினர் கோஷமிட்டார்கள். இவ்வாறு வந்த தகவல்களின் அடிப்படையில் வ.உ.சி மைதானத்திலிருந்தவர்கள், தேசிய கொடிக்கு அவமரியாதை செய்து மோடியை விமர்சனம் செய்ய தொடங்கினார்கள். இதற்கிடையே இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் மோடி என்று பிரச்சாரத்தை முன்நிறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். குறிப்பாக உக்கடம் பகுதியிலிருந்து வந்த இஸ்லாமியர்கள், அதிகமான அளவில் கல்வீச்சில் கலந்து கொண்டவர்கள், தடைசெய்யப்பட்ட அமைப்பை சார்ந்தவர்கள் என காவல் துறையினர் தெரிவித்தார்கள்.
கோவையில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என கடந்த ஒரு வருடமாக போராடிவரும் ‘ஹிப்ஹாப் தமிழா’ அமைப்பின் ஆதி, கோவையில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் கிடையாது, முழுக்க முழுக்க பிரிவினைவாதிகள் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டினார். போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவரும் இருந்தனர். அப்போது சிலர் தேசியக் கொடியை கீழே போட்டு காலில் மிதித்து அவமதிப்பு செய்தார்கள். இந்தியா எங்களை வஞ்சித்து விட்டது என்றும் தனித் தமிழ்நாடு கோஷமும் எழுப்பினார்கள். இதன் அடிப்படையில் என்னை சிலர் பேசச் சொன்னார்கள் என்றார். போராட்டக் களத்தில் பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் மாவேயிஸ்ட்களும் புகுந்து விட்டார்கள் என்பது தெளிவாகியது.
நான்கு நாட்களாக தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள், அரசியல் கலப்பில்லாமல் சென்று கொண்டிருந்தார்கள். 18ம் தேதி நாம் தமிழர் கட்சியின் சீமான் தன் ஆதரவாளர்களுடன், மாணவர்கள் நடத்தும் போராட்டக் களத்திற்கு அருகில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினார். இவருக்கு முன் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் போராட்டத்தில் கலந்து கொண்டார். போராட்ட களத்திலிருந்தவர்கள் மாணவர்கள் என்பதால், மதுரை காவல்துறையினர் மிகவும் அமைதியான முறையிலும் பொறுப்புடனும் நடந்து கொண்டார்கள். ஐந்து நாட்களாக சிறைபிடிக்கப்பட்ட இரண்டு ரயில்களை மீட்க கூட உடனடியாக எந்த முயற்சியையும் காவல்துறையினர் எடுக்கவில்லை. இதன் காரணமாக மதுரைக்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் அவசரச் சட்டம் கொண்டு வந்த பின்னரும் கூட போராட்டத்தை தொடர்ந்து நடத்த முயன்றதற்கு முக்கியமான காரணம், மதுரையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள், மாணவர்களை பயன்படுத்தி போராட்டத்தை திசை திருப்பியதுதான். துணை ஆணையர் முருகேஷ் மாணவர்களிடம் பேசிய போது, தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் உள்ளே புகுந்துகொண்டு, போராட்டத்தை திசை திருப்புகிறார்கள், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயர்களை கூறிய போது, கூட்டத்திலிருந்த, தடை செய்யப்பட்ட அமைப்பினர் தங்களது முகத்தை கைக்குட்டையால் மூடிக் கொண்டார்கள். ஒரு காவல்துறை ஆணையர் தடை செய்யப்பட்ட அமைப்பினர் என குறிப்பிட்டும் கூட, ஊடகங்கள் அதன் பெயர்களை வெளியிடவில்லை, ஏன் வெளியிடவில்லை என்பதை பற்றி எவரும் கேள்வி கேட்கவில்லை.
சேலத்தில் போராட்டத்தின் காரணமாக சிறைபிடிக்கப்பட்ட ரயில் சேதமடைந்துள்ளது. அறவழிப் போராட்டமாக சித்தரித்த ஊடகங்கள், ரயில் சிறைபிடிப்பிற்கு பின் ரயிலை எரிக்க சதி நடந்துள்ளது. சேலத்தை சேர்ந்த ரவுடிகள் ரயில் மறியல் போராட்டத்தை பயன்படுத்தி மாணவர்களை திசை திருப்பியதன் காரணமாக பெங்களூரு – காரைக்கால் ரயிலை மாணவர்கள் சிறைபிடித்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் போராட்டக் களத்தில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டார்கள்.
ஈரோடு நகரில் நடந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாணவர்கள் போராட்டத்தை முழுமையாக தங்களின் கையில் எடுத்துக் ்கொண்டார்கள். அதிக அளவில் பெண்கள் கலந்து கொள்ள உதவி புரிந்த அமைப்பு தி.க.வின் கொளத்தூர் மணி அமைப்பினர்.
முதல் மூன்று நாட்கள் எவ்வித பிரச்சினையும் இல்லை. நான்காம் நாள் நக்சல் ஆதரவு, இனவாத, மதவாத போக்கு கொண்ட நபர்கள் கூட்டத்திற்குள் ஊடுருவிய பின்னர் தான் போராட்டத்தின் திசை திருப்பட்டது. சர்வதேச மதவாதி ஒசாமா பின்லேடன் படத்தை பதாகைகளைாக ஏந்தி கோஷமிட்டார்கள். மேலும், போராட்டத்திலிருந்த மாணவர்கள், மாணவியர்களிடம் ஆட்சேபணைக்குரிய கருத்துக்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஆயிரக்கணக்கில் வினியோகிக்கப்பட்டன. இம் மாதிரி பிரசுரங்கள் குறிப்பாக மெரீனா கடற்கரை பகுதி, கோவை, மதுரையில் அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு என போராட்டம் நடந்த இடத்துக்கான பாதுகாப்பு வளையத்திலும் போக்குவரத்து சீரமைப்பு, உணவு வழங்கல், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் என அனைத்திலும் தங்களது ஆட்களை ஈடுபடுத்தினார்கள்.
17ம் தேதி தொடங்கிய போராட்டத்திற்கு முழு உதவி புரிந்தவர்கள், ஜல்லிக் கட்டு பிரச்சினையை தவிர்த்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தை திசை திருப்பியவர்கள். தினமும் குடிநீர், உணவு வகைகள் வழங்கப்பட்டதில் பெரும் பங்கு இவர்களுடையது. இந்த தேச விரோத சக்திகள் குடியரசு தினத்தை முற்றிலும் சீர்குலைக்க திட்டமிட்டு, அரசின் நடவடிக்கைகளை தவறாக சித்தரித்து, மாணவர்களை கலைந்து செல்லாமல் தடுத்தவர்கள். சென்னையில் விடியற்காலை 4 மணிக்கே காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்தும், கலைந்து சென்றவர்களை கட்டாயப்படுத்தியவர்கள்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு அதிக அளவில் கூட்டத்தை அனுப்புவதில், தமிழக ஆளும் கட்சியின் மேலிடத்தைச் சார்ந்தவர்களின் செயல்பாடும் உள்ளது. இவர்களின் பங்களிப்பு என்பது பொருளாதார பங்களிப்பு. முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடியையும் கடுமையான வார்த்தைகளால் கோஷம் எழுப்பும்படி இவர்கள் கேட்டுக் கொண்டார்கள். முதல்வரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டும், அவரது பதவியை பறிக்க வேண்டும் என்ற நோக்கமும் இந்த போராட்டத்தில் கலந்து இருந்தது.
மக்கள் பார்வையில்…
சிவானந்தா ஸ்ரீனிவாசன்,
சமூக ஆர்வலர் மதுரை
பிரதமரைச் சந்தித்து காரியத்தை வெற்றிகரமாக முடித்து அலங்காநல்லூர் திரும்பிய எளிமையான
முதல்வரை போராட்டக்காரர்கள் வாழ்த்தி வெற்றியைக் கொண்டாடி, வாடிவாசலில் மாடுபிடிக்க ஆவன செய்திருக்க வேண்டும். அதை தவற விட்டது போராட்டக்காரர்களுக்கு மாபெரும் அவமானம்.
மக்கள் பார்வையில்…
செந்தில்,சேலம்
தலைமை என்று இருந்திருந்தால் இப்படியெல்லாம் ஆகி இருக்காது என்ற வாதத்தை ஏற்க முடியாது. உணர்வாளர்கள் முன்னெடுத்த வரை போராட்ட களம் மிகச் சரியானதாகவும் நேர் பாதையிலும் தான் சென்று கொண்டிருந்தது – அதற்காக அவர்களை பாராட்டுவோம்.
மக்கள் பார்வையில்…
ரா.குமார், சென்னை
நமது தமிழக முதல்வர், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு கிருஷ்ணா நதி நீரை கொண்டு வந்தார். இப்போது ஜல்லிக்கட்டை கொண்டு வந்துள்ளார். தடைகளைத் தகர்த்து எறிந்தார். அவருக்கு பேரும், புகழும் கிடைத்தது. இது எதிர்க்கட்சிகாரர்களுக்கு பொறுக்கவில்லை. செய்து இந்த அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்று கலகம் செய்துள்ளார்கள். ஒரே வரியில் சொன்னால் இந்த ஜல்லிக்கட்டு தடையை உடைத்து இந்த வீர விளையாட்டை தமிழ்நாட்டிற்கு மீண்டும் கொண்டு வந்தவர் நமது பாரத பிரதமர் மோடியும் பன்னீர் செல்வமுமாக இதை இந்திய மக்கள் அனைவரும் அறிவர்.