மாதங்களில் உயர்ந்தது மார்கழி. அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணரே கூறியிருக்கிறார். அவரே, கீதையில் “மார்கழியை தேவர்களின் மாதம்” என்று சொல்கிறார். மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்த ஆண்டாள், அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள்.
மகாபாரத யுத்தம் மார்கழியில்தான் நடைபெற்றது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, எழுந்த விஷத்தை, சிவன் உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழியில்தான். இந்திரனால் பெருமழை வெள்ளம் உருவாக்கப்பட்டபோது, கிருஷ்ணர் கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்து, கோகுலத்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்தது மார்கழி மாதம். அதிகாலை கோலமிட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். ‘பீடு’ என்றால் ‘பெருமை’ என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி ‘பீடை’ என்றானது. மார்கழியில், அதிகாலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும்.
எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். சாணம் சிறந்த கிருமி நாசினி என்பதால் நோய்கள் வராமல் நம்மை காக்கும் என்பது போன்ற ஆன்மீக அறிவியலும் இதில் உள்ளது. மார்கழியில் சிவாலயங்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் விசேஷம். ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த மார்கழியில் இறைவனை துதித்துப் போற்றுவோம். அனைத்து நலன்களையும் பெறுவோம்.