“மாண்புமிகு மாணவ சமுதாயம்” – தேசிய மாணவர் தினம்

இன்றைய மாணவர்கள் நாளைய குடிமகன்கள் இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள் இன்றைய மாணவர்களே எதிர்கால இந்தியா எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்ற கோஷங்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால செயல்பாடுகளைப் பற்றி பெருமிதத்தோடு கூறும் வார்த்தைகள் என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயத்தில் நாளைய நாளைய என்று கூறி இன்றைய மாணவர் தலைவர்களை நாம் நிகழ்கால தலைவர்களாக ஏற்க மறுக்கிறோம். உண்மை யாதெனில் இன்றைய மாணவர்கள் இன்றைய குடிமகன்கள் ஆவர். நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் ஆற்றல் படைத்த வாக்குரிமை 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டை ஆளும் தலைமையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பெற்ற மாணவர்கள் வருங்காலத்து வசந்தங்கள் மட்டுமல்ல நிகழ்காலத்து நட்சத்திரங்களும் ஆவர். ஓடும் பாம்பை கையில் பிடிப்பதும் கடினமான கல்லைக்கூட கடித்துத் தின்று கரைப்பதும் இளங்கன்றுகளான மாணவர்களது பயம் அறியாத இந்தப் பருவத்தில்தான். அடுத்தவர் செய்வதற்கு ஆயிரம் முறை யோசிக்கும் அசாத்திய செயல்களைக்கூட அரை வினாடியில் செய்துமுடிக்க துணியும் அசாத்திய சாதகர்கள் நம் மாணவர்களே. அகில உலகமே அமெரிக்காவைப் பார்த்து அதிசயத்து போனபோது கூட அமெரிக்கா ஆச்சரியத்துடன் பார்ப்பது நம் நாட்டு மாணவர்களையே. இது ஏதோ சமீபத்தில் மட்டும் தோன்றிய நிகழ்வல்ல நம் பாரத நாடு உலகிற்கு வழங்கியுள்ள பல்வேறு கொடைகளில் கல்வி மிகவும் இன்றியமையாததாகும். உலகில் கல்விகற்க வேண்டுமெனில் அதற்கு மிகச் சிறந்த இடம் பாரதம் என்று கருதி உலக நாட்டு மாணவர்கள் கல்வி கற்க ஒருங்கிணைந்த நாடு நம் நாடு. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நமது பெருமைகளை பறை சாற்றும் வரலாறு சான்று ஆகும். சாதாரணமானவர்களை கூட அனைத்து கல்வி மற்றும் கலைகளில் சிறந்தவராக மாற்றும் குருகுலக் கல்வி முறை நம்மிடம் இருந்தது. அதில் கற்றுத் தேர்ந்தவர்கள் நாடாளும் அரசர்கள் ஆகவும் கற்றுக் கொடுத்தவர்கள் ராஜகுருக்களாகவும் விளங்கினர். உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அரசியல் முதல் ஆன்மிகம் வரையிலான அனைத்து பெரும் மாற்றங்களும் பெரும்பாலும் மாணவர்களும் இளைஞர்களும் பெற்றுத்தந்தவையே. நம் நாட்டுச் சுதந்திரப் போரில் போராடி உயிர் நீத்த எண்ணற்ற பெயர் தெரியாத உருவம் தெரியாத தியாகிகளில் பெரும்பாலானோர் இளைஞர்களே. மாணவ சமுதாயத்தின் பெருமைகளை மாணவ சமுதாயம் முதலில் முழுமையாக அறிய வேண்டும்.

ABVP தோற்றப் பின்னணி :

நாடு விடுதலை பெற்ற பிறகு நமது பாரத நாடு மீண்டும் பிறருக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக நமது முன்னோர்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். அவர்கள் சிந்தனையில் உதித்தது மாணவர் சக்தி. ஏனெனில் நல்ல மாணவர்கள் உருவானால் நல்ல மனிதர்கள் உருவாவார்கள் நல்ல மனிதர்கள் மூலம் நல்ல தேசம் உருவாகும் என்பதே அவர்களது சிந்தனை ஆக இருந்தது. ஆகையால் 1948இல் ABVP என்று அனைவராலும் அழைக்கப்படக் கூடிய அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்னும் மாணவர் அமைப்பானது துவங்கப்பட்டது. 1949 ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி பதிவு செய்யப்பட்டது. மாணவர்களிடையே நேர்மறை சிந்தனைகளை வளர்த்து அறிவு ஒழுக்கம் ஒற்றுமை கல்வி வளர்ச்சி,தேசபக்தி தலைமை பண்பு ஆகியவற்றை வளர்த்து வரும் உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பு ABVP.

தேசிய மாணவர் தினம் :

ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களையும் ஆசிரியர்களையும் இணைத்து கல்வி குடும்பமாக செயல்படும் ஆக்கபூர்வமான மாணவர் அமைப்பாகும். மாணவ சமுதாயத்திற்கு அவ்வப்போது எழும் அநீதிகளுக்கு எதிராகவும் தாய் நாட்டிற்கு ஏற்படும் பிரச்சனைகளின் போதும் முதல் குரல் கொடுப்பது ABVP மாணவர் அமைப்பாகும். மாணவர்களின் வளர்ச்சிக்காக செயல்படும் ABVP துவங்கி பதிவு செய்த தினமாகிய ஜூலை 9 தேசிய மாணவர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்துள்ள நேரத்திலும் பாரதம் முழுவதும் ABVP மாணவர்கள் நிவாரணப் பணிகள், சேவைப் பணிகள் என தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர். தனக்காக மட்டுமல்லாது தான் பிறந்த தேசத்திற்காக வாழக் கற்றுக் கொடுக்கும் உள்நாட்டு ராணுவம் ABVP என்றால் அது மிகையாகாது.

சவாலே சமாளி :

உலகில் தோன்றியுள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுத்தவர்கள் நாம். இப்பொழுது உள்ள சவாலான இந்த கொரொனாவிற்கும் நம்மால் தீர்வு கொடுக்க இயலும். குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் முயற்சி மூலம் கொரோனா விற்கு பிறகு கூட நம்மால் வலுவான தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப இயலும். அதற்கு மாணவத் தலைவர்கள் கிடைக்கின்ற நேரத்தையும் நம்மிடமுள்ள தகவல் தொழில் நுட்ப வசதிகளையும் நமது வளர்ச்சிக்காக பயன்படுத்தினால் வரும் காலம் வசந்த காலமே. மிகப் பெரும் சாதனைகள் அனைத்தும் பல்வேறு சோதனைகளுக்கு பிறகே நிகழ்த்தப்படும். கொரோனா விடுமுறை களையும் நமது சாதனைகளுக்காக நாம் பயன்படுத்துவோம். இது நமக்கு ஒரு பயிற்சிக் காலமே. ” இன்று நாம் இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பு நாளை எவ்வாறு ஆக வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வாறு ஆவதற்கான அனைத்து திறமைகளும் நம்மிடம் உள்ளது ” – சுவாமி விவேகானந்தர்.

உலகின் எதிர்பார்ப்பு நாமே :

சுவாமி விவேகானந்தர் தொட்டு ஏபிஜே அப்துல் கலாம் வரை அனைவரது நம்பிக்கையும் இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் மட்டுமே. இறைவனது பூஜைக்கு கூட வாடாத புத்தம்புதிய நறுமணமிக்க மலர்கள் தான் படைப்பார்கள் அதுபோல இளமைத் துடிப்புள்ள ஆற்றல் மிக்க இந்த பருவமே எத்தகு சாதனைகளையும் புரிவதற்கு நம்மை நாமே தயார் செய்யும் பருவம். தற்சார்பு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று உலகிற்கு வழிகாட்டும் வலிமைமிக்க நல்லரசாக பாரதம் உருவாகிட நாமும் நமது பங்களிப்பினை அளித்திடுவோம். ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா என்ற பாரதியின் பாதம் பணிந்து பாரதம் காப்போம் ஜெய்ஹிந்த்.

அனைவருக்கும் இனிய தேசிய மாணவர் தின நல்வாழ்த்துக்கள்.

லி.முத்து ராமலிங்கம்
மாநில அமைப்பாளர்
ABVP தென் தமிழ்நாடு.