மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 5

“மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்”

பொருள்: “நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் முறையே அவரது , பாதங்களையும் உச்சியையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல… இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனைப் புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப் பெருக்குடன் சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற,” என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் பெண்கள்.

கடவுள்களுக்கெல்லாம் கடவுளாய் விளங்குகிறான் சர்வேஸ்வரனான சிவபிரான். அத்துணை எளிதா அவனை அறிந்துணர்வது? அதையேனுமாவது முதலில் உணர்ந்து கொண்டால்தான் உறக்கம் தெளியும்.

.ஆர்.கே.