அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தம்பதி, மலைவாழ் மாணவர்களுக்கு, வாரம் ஒரு நாள், இலவசமாக பாடம் கற்பித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள, ஒலகடத்தைச் சேர்ந்தவர் கலைவாணி. இவரது கணவர் ஜெயப்பிரகாசன். இருவரும் ஆசிரியர்கள். இவர்கள், பர்கூர் மலைவாழ் குழந்தைகளுக்கு, ஆங்கிலம், கணிதம் குறித்து, வாரம் ஒருமுறை, இலவசமாக வகுப்பு எடுத்து வருகின்றனர்.
நான், 1997ல் வரதட்சணை ஒழிப்பு பிரிவு, டி.எஸ்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் மூன்று மாதங்கள் பயிற்சி பெற்றேன். குடும்பத்தினர் விரும்பாததால், ஆசிரியர் பணியை தேர்வு செய்து, 2,000ல் பணியில் சேர்ந்தேன். கணவர் ஜெயப்பிரகாசன், சென்னை துறைமுகத்தில் பணியாற்றினார். அவரும், ஆசிரியர் பணி மீதான ஈடுபட்டால், அந்த வேலையை விட்டு, சேலம் மாவட்டம், புளியம்பட்டி நடுநிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தற்போது நான், அந்தியூர், சிந்த கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன். பர்கூர், தேவர்மலை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக, நான்காண்டுகள் பணிபுரிந்தேன். அப்போது, மலைவாழ் மக்கள் மீது ஏற்பட்ட பற்றுதலால், இங்கு வந்த பிறகும், பர்கூர், தாமரைக்கரை சமூக அறிவியல் பள்ளியில், ஞாயிற்றுக் கிழமை தோறும், 40 மாணவர்களுக்கு ஆங்கிலம், கணித பாடத்தை இலவசமாக பயிற்றுவித்து வருகிறோம்.
கடந்த ஆறு மாதங்களாக, நானும், கணவரும் வாரம் ஒரு நாள், மலைப்பகுதிக்கு சென்று கற்பித்து வருகிறோம். இது, எங்களுக்கு ஆத்ம திருப்தியை அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.