அன்புடையீர், வணக்கம்.
* சென்னையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அண்ணன் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களுக்கு தாம்பூலத்துடன் மரக் கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன. எலுமிச்சை, கொய்யா என ஏராளமான மரக்கன்றுகளை விருந்தினர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இது ஒரு நல்ல அம்சம். பாராட்டப்பட வேண்டியது.
* சென்னையில் நவம்பர் 29 அன்று, ஹிந்து தர்ம வித்யா பீடம் சார்பாக எட்டாம் ஆண்டு சமய வகுப்பு மாணவர் மாநாடு நடைபெற்றது. சென்னையில் 35 இடங்களில் சமய வகுப்புகள் நடைபெறுகின்றன. அவற்றிலிருந்து குழந்தைகள், பெற்றோர்கள், ஆதரவாளர்கள் என சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு குழு பஜனை, குழு நடனம், பேச்சுப் போட்டி நடைபெற்றன. ஹிந்து தர்மத்தின் பெருமை, மதமாற்றம் ஆபத்து என்ற தலைப்புகளில் பேசிய குழந்தைகளின் பேச்சுகள் உணர்ச்சிகரமாக இருந்தன. நிகழ்ச்சியில், ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் அவர்கள் நிறைவுரை ஆற்றினார். சமய வகுப்புகளையும் ஆண்டு விழாவையும் சிறப்பாக நடத்திய அன்பர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதுபோன்ற சமய வகுப்புகள் எல்லா இடங்களிலும் நடந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தோடு திரும்பினேன்.
* சென்னையில் வெள்ள நிவாரணப் பணியில் ஒரு அரசு பஸ்ஸின் டிரைவர் தினசரி மூன்று வேளையும் 50 பேருக்கு உணவு தனது சொந்த செலவிலேயே, தனது வீட்டிலேயே தயாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பத்து நாட்கள் வழங்கி வந்தார். உதவி என்பது ஏதோ அரசு தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு தனி மனிதனும், தன் பங்கிற்கு ஏதாவது உதவிகள் புரிய முடியும் என்பதைச் செய்து காட்டினார். அவர் போன்று எண்ணற்ற மக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.