பாரதத்தின் தேசியப் பறவை. மயில், வண்ணத்தாலும் வனப்பாலும் வசீகரத்தாலும் நம்மை ஈர்க்கின்றது. முருகப்பெருமானின் வாகனம் மயில். மயில்வாகனன் என்றே பெயர்.
மயில்தோகை மீதான நாட்டம் இன்று தேசியப் பறவைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அது விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மயில் தோகை வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மயில் தோகையிலிருந்து எடுக்கப்படுகின்ற எண்ணெய் பல்வேறு உபாதைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்று கூறப்படுகிறது. இதன் எண்ணெய் வீரியத்தை ஊக்குவிக்கிறது என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து நவம்பர் வரை தோகைகளை மயில்கள் உதிர்க்கும். மயில் தோகைக்கு தேவை அதிகரித்துக்கொண்டே செல்வதால், தானாக உதிரும் மயில் பீலிகள் போதுமானவையாக இல்லை. எனவே மயிலை வேட்டையாடும் போக்கு அதிகரித்து வருகிறது. மயில்தோகைகளை பொறுத்தவரை தானாகவே உதிர்ந்தனவா அல்லது மயில்கள் வேட்டையாடப்பட்டு தோகைகள் பறிக்கப்பட்டனவா என்பதை எளிதில் பகுத்தறிய முடியாது. மயில்தோகைக்கு வெளிநாடுகளிலும் கிராக்கி உள்ளது. இதனால் மயில் தோகை கடத்தல் அதிகரித்து வருகிறது. 2005-2015 காலக்கட்டத்தில் சுமார் 16.25 லட்சம் மயில்தோகை கொத்துகள் வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மயில் தோகை விவகாரத்தில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு ரூ. 25.71 கோடி மதிப்புள்ள மயில் தோகைகள் கிட்டங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக குஜராத்தில் சுமார் 3 கோடி மதிப்புள்ள மயில்தோகைகளும் தமிழ்நாட்டில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மயில்தோகைகளும் பதுக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மயில் தோகை வாங்குவதில் ஒடிஸாதான் பெரிய சந்தையாக உள்ளது.
மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மயில்கள் அதிக அளவில் உள்ளன. தோகைக்காக மயிலை வேட்டையாடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முடிவுகட்ட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.