‘மத உணர்வை கொச்சைப்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை வேண்டும்’

கோவையில், ‘பி.எம். விஸ்வகர்மா யோஜனா’ என்ற திட்டத்தில், கைவினை கலைஞர்கள் உள்ளிட்டோர் கடன் பெற பதிவு செய்யும் முகாம் நடந்தது. திரிபுரா முன்னாள் முதல்வரும், பி.எம்.விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் தேசிய பொறுப்பாளருமான பிப்ளப் குமார், முகாமை பார்வையிட்டார்.

பின் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ”நாடு முழுதும் இதுவரை, 5 லட்சம் பேர் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக, 30 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது” என்றார்.

விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தில், கைவினை தொழில் உட்பட, 18 வகையான தொழில்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் சில மேற்கு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, பதிவு நடந்து வருகிறது. தொழில் செய்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகள், 15,000 ரூபாய் மதிப்பிலான தொழில் உபகரணங்கள் மற்றும் கடனுதவி வழங்கப்படுகிறது. விளையாட்டின் போது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இறைவனை வேண்டுவது தவறில்லை என்றால், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷம் போடுவதும் தவறில்லை. மதமாற்றத்திற்கு துணை போகும் வகையில், தி.மு.க., அரசின் செயல்பாடுகள் உள்ளன. மத உணர்வுகளை கொச்சைப்படுத்துவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.