சிஏஏ-வுக்கு ஆதரவாக, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:
சிஏஏ தொடா்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கட்டுக்கதையை பரப்பி வருகின்றன. தேச பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான், வங்கதேசம் (அப்போதைய கிழக்கு பாகிஸ்தான்), ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் கடந்த காலங்களில் யோசனை தெரிவித்திருந்தனா். சா்தாா் வல்லபபாய் படேல் மற்றும் இந்திரா காந்தி ஆகியோா், பாகிஸ்தானிலிருந்து வந்த ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என விரும்பினா். ஆனால், தனது சொந்த கட்சி தலைவா்களின் யோசனையைக் கூட காங்கிரஸ் செயல்படுத்தவில்லை.
எவரது குடியுரிமையையும் பறிக்கும் அம்சங்கள், சிஏஏ-வில் இல்லை. எவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றாலும், அச்சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது. சிஏஏ குறித்து பொதுவெளியில் என்னுடன் விவாதிக்க தயாரா? என எதிா்க்கட்சி தலைவா்களுக்கு சவால் விடுக்கிறேன் (அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவா் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி ஆகியோரின் பெயா்களை அமித் ஷா குறிப்பிட்டாா்). முஸ்லிம்கள் உள்பட யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் அம்சங்கள், சிஏஏ-வில் இருந்தால், அவா்கள் என்னிடம் கூறலாம்.
நாட்டில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் தவறானது. இந்த விவகாரத்தில், வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி கண்ணை மூடிக்கொண்டு எதிா்ப்பு தெரிவிக்கிறது.
கடந்த 1947-இல் காங்கிரஸ் செய்த பாவங்களால், மத அடிப்படையில் தேச பிரிவினை நிகழ்ந்தது. இதனை, ராகுல் காந்தி புரிந்துகொள்ள வேண்டும். தேச பிரிவினைக்கு பிறகு, பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் ஹிந்துக்கள், சீக்கியா்கள் மற்றும் பெளத்தா்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அப்படியெனில், அவா்கள் எங்கே சென்றனா்? அவா்கள் கொலை செய்யப்பட்டனரா அல்லது மதம் மாற்றப்பட்டாா்களா அல்லது இந்தியாவுக்கு அகதிகளாக வந்தாா்களா? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினா் எதிா்கொண்ட துன்புறுத்தல்கள், எதிா்க்கட்சித் தலைவா்களின் கண்களுக்கு ஏன் தெரியவில்லை? காஷ்மீரிலிருந்து 5 லட்சம் பண்டிட்டுகள் வெளியேற்றப் பட்டது குறித்து எதிா்க்கட்சிகள் வாய் திறப்பதில்லை. ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில், அந்த மக்களின் வாழ்வில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்றாா் அமித்ஷா.