ஒருமுறை ஸ்ரீ வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் சுவாமிகள், ஒரு கோயில் சந்நிதி வீதியில் சீடர்களுடன் எழுந்தருளினார். அப்பொழுது சுவாமி சரணாகதியைப் பற்றிச் சொல்ல நேர்ந்தது. இது எளிமையான வழிதான். ஆனால் அதன் எளிமையைக் குறித்து நமக்குப் பரமபதம் நிச்சயம் என்று கூறிக்கொண்டே தாறுமாறான வாழ்க்கை நடத்தக் கூடாது. நேர்மையான வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். மேலும், உள்ளத்தில் பகவான் நம்மைக் காப்பாற்றி, மோட்சம் அளிப்பான் என்ற உறுதி இரவும் பகலும் எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும்” என்று சுவாமி அருளுரை ஆற்றியபோது, ஒரு குடிகாரன் அங்கு குறுக்கே வந்தான். நல்ல குடிபோதை! அதிலும், ஆசார்யரைப் பார்த்து நமஸ்கரித்தான். பின்னர் பெருமாள் கோயில் கோபுரத்தைத் திரும்பிப் பார்த்து, அப்பா! நான் உன் ஆளு! என்னை உட்டுடாதே!” என்று கூறி நமஸ்கரித்துத் தள்ளாடிக் கொண்டே நடந்து சென்றான்.
இதைக் கவனித்த சுவாமியின் கண்கள் கலங்கின. பார்த்தீர்களா! இதுவும் சரணாகதிதான். தன் நிலை தெரியாத குடிபோதையிலும், குருவை நமஸ்கரித்துப் பகவானைப் பார்த்து, நான் உன்னைச் சேர்ந்தவன்! என்னை நீ கைவிடாதே!” என்று கேட்டான் அல்லவா? எப்போதுமே மனத்தில் இறையுணர்வு இருந்தால் ஒழிய, முற்றிய குடிபோதையில் கூட அச்சொற்கள் நாவில் வருமோ!” என்று வியந்தார்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்