கர்நாடக மாநிலம், மங்களூரு விமான நிலையத்தை தகர்க்கும் வகையில், 10 கிலோ எடை கொண்ட வெடிபொருள் நேற்று காலை கைப்பற்றப்பட்டது. உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பேராபத்து தவிர்க்கப்பட்டது.
கர்நாடகாவில், கடற்கரை நகரமான மங்களூரு எப்போதுமே பதற்றமாக காணப்படும். கேரளா எல்லையில் இருப்பதால், அரபு நாடுகளுக்கு, மங்களூரிலுள்ள பஜ்பே விமான நிலையத்திலிருந்து பலரும் செல்வர்.இங்கே, வெளிநாடுகளிலிருந்து தங்க நகைகள் கடத்தி வருவது சர்வ சாதாரணமான விஷயம். இதனால், விமான நிலையத்தில், எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.இந்நிலையில், வழக்கம் போல், சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், மோப்ப நாயுடன் விமான நிலையத்தை நேற்று காலை, 10:00 மணியளவில் சோதனை நடத்தி வந்தனர்.
மர்ம பொருள்
அப்போது, டிக்கெட் கவுன்டர் அருகில், கறுப்பு நிற மர்ம பை ஒன்று கிடந்தது. இதனை மோப்பம் பிடித்த போலீசாரின் மோப்ப நாய், சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதை குரைப்பதன் மூலம் காட்டியது.இதையடுத்து, அந்த பையை திறந்து பார்த்த போது, மடிக்கணினியுடன் ஒயர்களால் இணைக்கப்பட்ட எலக்ட்ரானிக் மர்ம பொருள் இருந்தது. பின், வெடிகுண்டுஎன்று உறுதி செய்யப்பட்டு, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலறிந்த போலீசார், பெங்களூரு உட்பட கர்நாடகத்திலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தினர். மங்களூரு விமான நிலையத்தை, சி.ஐ.எஸ்.எப்., மற்றும் உள்ளூர் போலீசார், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பயணியர், விமான நிலையத்தின் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.பின், வெடிகுண்டு செயலிழக்கும் உபகரணம் அடங்கிய வாகனம் மூலம், வெடிகுண்டு இருந்த பையை, விமான நிலையத்திலிருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆள் நடமாட்டமில்லாத கெஞ்சாரு மைதானத்துக்கு எடுத்து வந்தனர்.
பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட, கங்கையா எனும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர், பாதுகாப்பு கவசம் அணிந்து கொண்டு, அந்த பையை வெளியில் எடுத்து, 12 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழியில் வைத்தார். அதை செயலிழக்க செய்ய முடியவில்லை. இதனால், அந்த குழியைச் சுற்றி மணல் மூடைகள் அடுக்கி, ஒயர்களை இணைத்து, மாலை 5:36 மணிக்கு வெடிக்க செய்தனர்.வெடிபொருள், எதனால் செய்யப்பட்டது என்பதை அறிய, ஏழு பேர் கொண்ட தடயவியல் ஆய்வக அதிகாரிகள், அதன் துகள்களை கொண்டு சென்றனர்.பையில், 10 கிலோ எடை உடைய வெடி பொருள் இருந்துள்ளது. அது வெடித்திருந்தால், 500 மீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியிருக்கும்.
ஆலோசனை
இதன் மூலம், மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது; பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.ஏற்கனவே தென் மாநிலங்களில் பயங்கரவாத செயல்களை நடத்தி, குடியரசு தின கொண்டாட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சித்தது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, குடியரசு தினத்துக்கு, இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு கிடைத்தது, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.தகவலறிந்ததும், டில்லியிலிருந்து அவசரமாக தேசிய பாதுகாப்பு படையினர் மங்களூரு வந்தனர். உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆட்டோவில் வந்த மர்ம நபர்
விமான நிலையத்தில், வெடிகுண்டு வைத்ததாக சந்தேகித்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர் ஒருவரின் படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நபர் தொப்பி அணிந்து கொண்டு, கையில் ஏதோ பொருளைப் பிடித்தபடி, காலை, 9:00 மணியளவில், ஆட்டோவிலிருந்து இறங்கி, விமான நிலையத்துக்கு வருகிறார். அந்த படம், கேரளா, டில்லி, பெங்களூரு, சென்னை என, பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நபர், காலை, 8:30 மணியளவில், மங்களூரு நகர பஸ் நிலையத்தில் இருந்து, ராஜ்குமார் என்ற தனியார் பஸ் மூலம், விமான நிலையத்தின் முன் வந்திறங்கியதாகவும், அங்கிருந்து ஆட்டோவில் வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த நபர் தான் வெடி மருந்து பையை வைத்தது என, போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
வெடிகுண்டு மிரட்டல்126 பயணியர் அவதி
வெடிகுண்டை செயலிழக்கும் பணியில்ஈடுபட்டு கொண்டிருந்த போது, பலத்த பாதுகாப்புடன் விமானங்கள் இயக்கப்பட்டன. பயணியர் முழுமையாக சோதிக்கப்பட்டனர். மதியம், 2:57 மணிக்கு, இண்டிகோ விமான நிறுவனத்துக்கு, மர்ம நபர் ஒருவர் போன் செய்து, ‘ஒரு வெடிகுண்டு தான் எடுத்துள்ளீர்கள். இன்னும் இரண்டு வெடிகுண்டுகள் வைத்துள்ளோம்’ எனக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இதனால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. மதியம், 3:00 மணிக்கு, ஹைதராபாத் புறப்பட தயாரான இண்டிகோ விமானம் திடீரென நிறுத்தப்பட்டது. அதிலிருந்த, 126 பயணியரை இறக்கி, அவர்களை சோதனை செய்தனர். விமானத்திலிருந்த பயணியரின் சரக்குகளும் முழுமையாக சோதிக்கப்பட்டது.
எஸ்.ஐ., வில்சன் கொலைக்கு பழி தீர்ப்பா?
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த டிசம்பர், 19ம் தேதி, மங்களூரில் நடந்த கலவரத்தின் போது, போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். இந்த கலவரத்தில், சில அமைப்பினருக்கு தொடர்புள்ளது எனக் கூறப்பட்டது. மேலும், கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில், சமீபத்தில் கொலை செய்யப்பட்ட, எஸ்.ஐ., வில்சன் வழக்கில் தொடர்புடைய இருவர், கர்நாடகத்தின் உடுப்பியில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் பழி தீர்க்கும் வகையில், வெடிகுண்டு வைத்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
ஜீ இது மட்டும் இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு மங்களூர் ரிபைனரி மேலே நான்கு கி.மீ ஆள் இல்லாத குட்டி விமானம் நோட்டம் இட்டு சென்றது. என்ன நடக்க போகிறதோ?