தேச விடுதலை போராட்ட காலத்தில் காங்கிரஸ் சார்பில் 1932, ஜனவரி 26ம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆர்யா என்ற கே. பாஷ்யம் எனும் 25 வயதே ஆன இளைஞர் அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொடி கம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றுவது என்று முடிவெடுத்தார்.
மிகப்பெரிய ஒரு கொடியை தயார் செய்து, அதில் இன்றிலிருந்து பாரதம் சுதந்திரம் அடைகிறது” என்ற வாசகத்தை எழுதினார். சுப்பிரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபாலனை உடன் அழைத்துக் கொண்டு மவுண்ட் ரோட்டில் உள்ள எல்பின்ஸ்டன் எனும் சினிமா தியேட்டருக்குச் சென்றார். படம் பார்ப்பது அவர் நோக்கமல்ல. படம் முடிந்து கோட்டைக்குள் செல்லும் கூட்டத்தோடு உள்ளே நுழைந்து விட்டார்.
அங்குள்ள கொடிமரத்தின் அருகில் சென்றார். 140 அடி உயரமுள்ள கம்பத்தில் ஏறத் துவங்கினார். அப்போது சென்னை கலங்கரை விளக்கத்தில் உள்ள சுழல் விளக்கின் வெளிச்சம் அவர் மீது பட்டபோதெல்லாம் அப்படியே கம்பத்தோடு கம்பமாக ஒட்டிக்கொண்டார். கம்பத்தில் ஏற்கனவே கட்டியிருந்த யூனியன் ஜாக் கொடியை அவிழ்த்துவிட்டு நமது மூவர்ணக் கொடியை பறக்கவிட்டார். வேலை முடிந்தவுடன் விறுவிறுவென்று இறங்கி அங்கிருந்து தப்பிவிட்டார்.
காலையில் இதைப் பார்த்த ராணுவ வீரர்கள் பதட்டமடைந்து கவர்னருக்குக் செய்தி அனுப்பினார்கள். யார் இந்தக் கொடியை ஏற்றியது என்று கடைசிவரை அவர்களால் கண்டிபிடிக்க முடியவில்லை.
ஆர்யா சிறந்த ஓவியர். இவர் வரைந்த மகாகவி பாரதியின் படமே சென்னை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றளவும் இருந்து வருகிறது.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்