மகான்களின் வாழ்வில்:தாயினும் சாலப் பரிந்து

கல்கத்தாவைச் சேர்ந்த சுவாமி அசோகானந்தா ஆசிரியராக இருந்தார். அவர்

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் தொடர்பால் ஆசிரியப் பணியை விட்டுவிட்டு துறவியானார். வங்காளத்திலிருந்து சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் வந்துசேர்ந்தார். தான் துறவு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டதை தனது தாய்க்கு கடிதம் மூலம் தெரிவித்தார். தனது மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற கனவில் இருந்த தாய்க்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சியில் மயக்கமடைந்து விட்டார்.

சுவாமி அசோகானந்தருக்கும் அவரது தாய்க்கும் இருந்த ஒரு அற்புதமான அன்புப் பிணைப்பு தன் தாய் மயக்கமடைந்த அதேநேரத்தில் சுவாமிகளின் உள்ளுணர்வில் தாயின் துக்கத்தை உணர முடிந்தது. அதனால் அவரது மனஅழுத்தம் அதிகரித்தது. அப்போது ஒரு மென்மையான கரம் இதமாக சுவாமிகளின் நெஞ்சை தடவி தந்தது. ‘மகனே நீ துறவியாக வேண்டும் என்பது இறைவனது ஏற்பாடு… உனது துக்கத்தை நீக்குவது எனது பொறுப்பு. கவலைப்படாதே’ என்ற குரல் கேட்டது. அதைக் கேட்டவுடன் அசோகானந்தரின் மனம் அமைதி அடைந்தது.

தன் தாயைப் பற்றிய பயம் நீங்கியது. இரண்டு நாட்களில் தாயிடமிருந்து கடிதம் வந்தது. அதில், ‘மகனே நீ எடுத்த முடிவு சரியானது’ என்று எழுதியிருந்தார். அதன்பின் சுவாமிஜி அமெரிக்காவில் 39 ஆண்டுகள் ஆன்மீகப் பணியாற்றினார்.

கழுகு மேலே பறந்தால் தாய்க்கோழி குஞ்சுகளைத் தன் சிறகடியில் வைத்துக் காப்பது போல், ஸ்ரீ ராமகிருஷ்ணர்  நம்மைத் துன்பத்தின் பிடியிலிருந்து காக்கிறார் என்கிறார் சுவாமி அசோகானந்தா.

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில்.

அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்