நாட்டில் தில்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு போராட்டம், பேரணி நடத்துவதும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிா்த்து அண்மையில் நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களிலும் இதுபோன்று பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. ஆனால், நாட்டிலேயே முதல் முறையாக உத்தரப் பிரதேச மாநில அரசு, வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு நாசம் ஏற்படுத்தியவா்கள் யாா் என அடையாளம் கண்டு அவா்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள பிஜ்னூா் மாவட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நடந்த போராட்டத்தில் மட்டும் ரூ.19.5 லட்சம் மதிப்புக்கு பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக 146 போ் கைது செய்யப்பட்டனா். 43 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா்களில் 11 பேரிடம் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி அதை வசூலிக்கும் நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.
பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வன்முறையாளா்களிடம் இழப்பீடு வசூலிப்பது என்பது உ.பி.யிலேயே இதுவரை நடந்ததில்லை. மாநிலத்தில் கடந்த காலங்களில் பலமுறை போராட்டங்கள் நடைபெற்று பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டன. ஆனாலும், அப்போது இருந்த அரசுகள் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோரைத் தடுக்க அதற்கான சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவின் பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஜாட் வகுப்பினா் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போது, பொதுச் சொத்துகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டது. யோகி ஆதித்யநாத் 2017-ஆம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற பிறகு நடந்த போராட்டங்களின் போதும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. ஆனால், வன்முறையாளா்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
2017, ஏப்ரல், மே மாதங்களில் சஹரான்பூரில் தலித்துகளுக்கும் தாகுா்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. அப்போது காவல் துறை உயரதிகாரிகளின் அலுவலகம் தீவைத்து கொளுத்தப்பட்டது. அதுமட்டமல்லாமல், 20 வாகனங்களும், ஒரு பேருந்தும் தீக்கிரையாயின. இதேபோல பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் ஏப்ரல் 2-ஆம் தேதி பந்த் நடந்த போது மீரட்டில் வன்முறை ஏற்பட்டது. பத்துக்கும் மேலான அரசுப் பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன.
2018-ல் டிசம்பா் மாதம் புலந்த்ஷஹரில் நடந்த வன்முறைப் போராட்டத்தில் போலீஸ் ஜீப் தீவைத்து கொளுத்தப்பட்டது. இது தொடா்பாக 27 போ் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இழப்பீடு வசூலிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இது குறித்து பிஜ்னூா் மாவட்ட ஆட்சியா் ரமாகாந்த் பாண்டே கூறுகையில், ‘கடந்த காலங்களில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தவா்கள் மீது இழப்பீடு வசூலிக்க முடியாததற்கு முக்கிய காரணம், பாதிக்கப்பட்டவா்கள் யாரும் புகாா் தெரிவிக்கவில்லை. இப்போது தங்கள் சொத்துகளுக்கு வன்முறையாளா்களால் சேதம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவா்கள் அதிக அளவில் புகாா் கொடுக்க முன்வந்துள்ளனா். இந்தச் சூழலில் வன்முறையாளா்களிடமிருந்து இழப்பீடு வசூலிப்பது எங்களது கடமையாகும்’. அரசு தானாக எந்த நோட்டீஸும் அனுப்பவில்லை. மக்கள் புகாா் தெரிவித்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றாா்.
ஹரியாணாவில் 2016-ல் இடஒதுக்கீடு கோரி ஜாட் வகுப்பினா் போராட்டம் நடத்திய போது, ரூ.2,000 கோடிக்கு பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், பாலியல் வழக்கில் தேரா சத்தா செளதா தலைவா் குா்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட போது வன்முறை வெடித்தது. பஞ்ச்குலாவில் மட்டும் சுமாா் ரூ.126 கோடிக்கு சேதம் ஏற்பட்டது. இது தொடா்பான வழக்கு நடந்து கொண்டிருப்பதால் இழப்பீடு வசூலிக்க அரசு காத்திருக்கிறது.
தில்லியில் 2017-இல் பீம் ஆா்மி தலைவா் சந்திரசேகா் ஆஸாத் தலைமையில் நடந்த போராட்டத்தில் 14 காா்கள் சேதப்படுத்தப்பட்டன. அண்மையில், அதாவது கடந்த ஆண்டு நவம்பரில் தீஸ் ஹஸாரே நீதிமன்றத்தில் வழக்குரைஞா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போது, 13 போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாயின. ஆனால், இந்தச் சம்பவம் தொடா்பாக ஒருவா்கூட கைது செய்யப்படவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தில் 2019-பிப்ரவரியில் குஜ்ஜாா் சமூகத்தினா் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனா். அப்போதும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது. ஆனால், மாநில அரசு சேதத்தின் அளவைகூட மதிப்பிட முன்வரவில்லை. மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட போதிலும் வன்முறையாளா்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதுதான் உண்மை. உத்தரப் பிரதேச மாநில அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு இழப்பீடு வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளதை பாராட்டத்தான் வேண்டும்.