அசாமில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎப்பி) மற்றும் அனைத்து போடோ மாணவர்கள் கூட்டமைப்பு (ஏபிஎஸ்யு) ஆகியவற்றுடன் நேற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அசாமில் உள்ள போடோலாந்து பகுதியில் போடோ இன மக்கள்பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அப்பகுதியை தனி மாநிலமாகவோ யூனியன் பிரதேசமாகவோ உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் அவ்வப்போது தொடங்கப்பட்டன. இக்குழுக்கள் நடத்திய தொடர் போராட்டங்கள், வன்முறை காரணமாக நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டன.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட இந்த அமைப்புகளுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதன் பலனாக இதற்கு முன்பு2 முறை ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 1993-ம் ஆண்டு அனைத்து போடோ மாணவர்கள் சங்க கூட்டமைப்புடன் (ஏபிஎஸ்யு)முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, போடோலாந்து தன்னாட்சி கவுன்சில் உருவாக்கப்பட்டது. இதற்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
கடந்த 2003-ம் ஆண்டு போடோ லிபரேஷன் டைகர்ஸ் (பிஎல்டி) என்ற அமைப்புடன் 2-வது ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையின் கீழ், போடோலாந்து டெரிடோரியல் கவுன்சில் உருவாக்கப்பட்டது.
கோக்ரஜார், சிராங், பஸ்கா மற்றும் உடால்குரி ஆகிய 4 மாவட்டங்கள் இதன் கீழ் கொண்டுவரப்பட்டன. கல்வி, வனம், தோட்டக்கலை உள்ளிட்ட 30 துறைகள் இதன் கட்டுப்பாட்டில் வந்தன. எனினும், காவல், வருவாய், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் அசாம் அரசிடமே இருந்து வருகிறது. ஆனாலும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில், போடோலாந்து பகுதியில் அமைதியை நிலைநாட்டவும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா முடிவு செய்தார். இது தொடர்பாக மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் கிளர்ச்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, என்டிஎப்பி மற்றும் ஏபிஎஸ்யு ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய, அசாம் மாநில அரசுகளுக்கிடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் முன்னிலையில் இந்த முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில், “அமைதி, நல்லிணக்கம் மற்றும் இணைந்து செயல்படுவதற்கான புதிய தொடக்கமாக இந்த ஒப்பந்தம் அமையும். நாட்டுக்கு இன்று(நேற்று) மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். போடோ இன மக்களின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும். முன்பு ஆயுதம் ஏந்தியஅமைப்புகளில் இடம்பெற்றிருந்தவர்கள் இனி நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெறுவார்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறும்போது, “வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் மூலம் போடோ இன மக்களின்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இது அசாம் மாநிலத்துக்கும் போடோ மக்களுக்கும் சிறந்த எதிர்காலம் அமைய உதவிகரமாக இருக்கும். போடோ இன மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதுடன் அரசியல், பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த ஒப்பந்தம் உதவும். 1,550 போராளிகள் 130 ஆயுதங்களுடன் 30-ம் தேதி சரணடைய உள்ளனர். அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்” என்றார்.