கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள, சுவாமி விவேகானந்தர் மண்டபம், நேற்று, பொன் விழா ஆண்டில் கால் பதித்தது.
சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவின், சிகாகோ நகரில் நிகழ்த்திய உரை, உலகை, ஹிந்து மதம் மற்றும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது.இந்த உரைக்கு முன்னதாக, அவர், கன்னியாகுமரி வந்து, கடலில், 500 மீ., நீந்தி சென்று, அங்கிருந்த பாறையில், 1892 டிச., 25 முதல், 27ம் தேதி வரை தவம் இருந்தார்.
கடந்த, 1962ல், அவரது, 100வது பிறந்த நாளில், கன்னியாகுமரி கடல் நடுவில், நினைவு சின்னம் அமைக்க, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நடவடிக்கை எடுத்தது. அப்போதைய, ஆர்.எஸ்.எஸ். தலைவர், கோல்வால்கர் அனுமதியுடன், மும்பையை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி, ஏகநாத் ரானாடேயிடம், அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
அப்போது நாடு முழுவதும், 323 எம்.பி.க்களிடம் கையெழுத்து பெற்ற ரானாடே, அவற்றை, அப்போதைய பிரதமர், ஜவஹர்லால் நேருவிடம் கொடுத்தார். அப்போதைய முதல்வர், பக்தவத்சலமும், நினைவு சின்னம் அமைக்கும் பணிக்கு, ஒத்துழைப்பு வழங்கினார்.
பக்தவத்சலத்தின் ஆலோசனையின்படி, அப்போதைய, தி.மு.க., தலைவர், அண்ணாதுரை மற்றும் சில, கம்யூ., தலைவர்கள் அடங்கிய, நினைவு மண்டப குழு நியமிக்கப்பட்டனர். இதனால், சாதுர்யமாக, தடைகள் தகர்க்கப்பட்டு, 1964 நவ., 6ல், விவேகானந்தர் நினைவு மண்டப கட்டுமான பணிகள் துவங்கின.
ராமநாதபுரத்தை சேர்ந்த, எஸ்.கே.ஆசாரி, இதன் தலைமை சிற்பியாக செயல்பட்டார். கோவிலுக்கு நிகரான, ‘வங்களா வாஸ்து’ சிற்ப மாதிரியில், இது அமைக்கப்பட்டது.
இதற்கான மொத்த செலவு, 1.35 கோடி ரூபாய். இதற்காக ரானாடே, 30 லட்சம் பேரிடம், தலா, 1 ரூபாய் நன்கொடை பெற்றார். கட்டுமான பொருட்கள், படகுகள் மூலம், பாறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதற்காக, ஆயிரக்கணக்கான மனித சக்தி பயன்படுத்தப்பட்டது.
கடந்த, 1970 செப்., 2ல், அன்றைய ஜனாதிபதி, வி.வி.கிரி, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை, நாட்டு மக்களுக்கு அர்ப்பணம் செய்தார். வரலாற்று சிறப்பு வாய்ந்த, விவேகானந்தர் மண்டபம், நேற்று முதல், பொன்விழா ஆண்டில் கால் பதித்துள்ளது. இந்நிகழ்வை, ‘ஒரே இந்தியா; வெற்றி இந்தியா’ என்ற கோஷத்தை முன்வைத்து, நாடு முழுவதும், விழா கொண்டாடப்படுகிறது.