சந்திரயான் 2 நிலவை அடைந்ததில் மகிழ்ச்சி

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலம், ஜூலை, 22ல், சென்னை அருகேயுள்ள, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, ராக்கெட் மூலம், விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம், ‘ஆர்பிட்டர்’ எனப்படும் நிலவை சுற்றும் சாதனம், ‘லேண்டர்’ எனப்படும் தரையிறங்கும் கருவி, அதிலிருந்து பிரிந்து, நிலவின் மீது அனைத்து திக்குகளில் சுற்றும், ‘ரோவர்’ என்ற கருவி என, மூன்று சாதனங்களை உடையதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், லேண்டர் கருவிக்கு, விக்ரம் என்றும், ரோவருக்கு, பிரக்யான் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று, சந்திரயான் – 2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து, லேண்டர் கருவியை பிரிக்கும் பணியை, விஞ்ஞானிகள், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திலிருந்து மேற்கொண்டனர். நேற்று மதியம், 12:45 மணிக்கு துவங்கிய இந்த பணி, 1:15க்கு முடிவடைந்தது. ஆர்பிட்டரிலிருந்து, லேண்டர் கருவி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சந்திரயான் – 2 விண்கலத்தின் சுற்றுப் பாதை, அடுத்த இரண்டு நாட்களுக்கு மேலும் குறைக்கப்பட்டு, லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான நடவடிக்கைகளை, விஞ்ஞானிகள் மேற்கொள்வர். திட்டமிட்டபடி, வரும், 7ம் தேதி அதிகாலை, லேண்டர் கருவி, நிலவின் தென் பகுதியில் கால் பதிக்கும். அதைத் தொடர்ந்து, லேண்டரில் உள்ள ரோவர் எனப்படும், ஆறு சக்கரங்களை உடைய, ‘ரோபோ’ வாகனம், தனியாக பிரிந்து, நிலவின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்.

இதற்காக, இவற்றில், அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நிலவில் உள்ள கனிம வளங்கள், அதன் கால நிலை ஆகியவை பற்றியும், அதில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வசிப்பதற்கான சூழல் உள்ளதா என்பது குறித்தும், இவை ஆய்வு மேற்கொண்டு, பெங்களூரில் உள்ள, இஸ்ரோ தலைமையகத்துக்கு தகவல்களை அனுப்பும். லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள கருவிகள், 14 நாட்களுக்கு மட்டுமே செயல்பட்டாலும், ஆர்பிட்டர் மட்டும், ஓர் ஆண்டுக்கு நிலவை சுற்றி வந்து, தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும். அதில் உள்ள சக்தி வாய்ந்த மற்றும் அதி நவீன தொழில்நுட்ப வசதியுடைய கருவிகள் மூலம், நிலவை தொடர்ந்து புகைப்படம் எடுத்து, இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கும்.