பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு செய்ததாக அமைச்சர்கள் சக்ரபாணி, ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிரான புகாரை மீண்டும் விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2022 ஜனவரி மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,296 கோடியே 88 லட்சம் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கியது. இதில் தரமற்ற பொருட்கள் வழங்கியதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே இதற்கு காரணமான அமைச்சர்கள் சக்ரபாணி மற்றும் ஐ.பெரியசாமி உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயகோபி என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை நிராகரித்து லோக் ஆயுக்தா கடந்த 2022 மார்ச் 2 அன்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து ஜெயகோபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், கரும்பு, பருப்பு, புளி போன்ற பொருட்கள் தரமற்றவையாக இருந்தன. உயிரிழந்த வண்டு மற்றும் பூச்சிகள் இந்த பரிசுத்தொகுப்பில் அதிகமாக இருந்தன. இதன்மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நான் தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியதால், தரமற்ற பொருட்களை விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே தரமற்ற பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, அமைச்சர்களுக்கு எதிரான புகாரை நிராகரித்து லோக் ஆயுக்தா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, இந்த புகாரை மீண்டும் விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.