பெரும் வலிவுடன் நாம் மீண்டு எழுவோம் (பகுதி 1)

ஷியாம் சேகர் தொழில் முதலீட்டு ஆலோசகர். தமிழக முதலீட்டாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறு முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்கங்களும் பயிலரங்கங்களும் நடத்துபவர். தினமலர் உட்பட பல பத்திரிகைகளில் எழுதி வருகிறார். தொலைக்காட்சி விவாதங்களில் தேசிய சிந்தனைகளை வெளிப்படுத்துவார். விஜயபாரதம் இதழுக்காக ஷியாம் சேகருடன் உரையாடுபவர், எம்ஆர். ஜம்புநாதன்.

கொரானா காலத்தில் சிறு குறு தொழில் (MSME) முனைவோர் பொருளாதார பாதிப்புகளை எப்படி எதிர்கொள்வது ?

சிறு-குறு தொழில்களுக்கு கொரோனா பெரும் சோதனையாகத் தான் அமைந்து விட்டது. ஏற்கனவே, பொருளாதரம் குறைவான வளர்ச்சி கண்ட சூழலில் இந்த வைரஸ் மேலும் நலிவடைந்த நிலைக்கு தொழில்களைத் தள்ளிவிட்டது. பண சுழற்சி மிகவும் குறைவான வர்த்தக சூழலை சந்திக்கும் MSME தொழில்கள் கொரோனாவால் இயங்காமல் போய்விட்டன. அதே சமயம், சம்பளம் கொடுக்க வேண்டிய இடத்தில் தவிக்கின்றன. MSME நிறுவனங்கள் உடனடியாக தங்கள் நிதிநிலையை சீரமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதற்கு வங்கிகளின் ஒத்துழைப்பு தேவை. வாடிக்கையாளர்களிடம் இருந்து உரிய நேரத்தில் பணம் வந்து சேர வேண்டும். போதிய உற்பத்தி செய்ய நிதியும், பொருட்களுக்கு சந்தையில் வரவேற்பும் கிடைக்க வேண்டும். தன் கையில் இருக்கும் நிதியையும், முதலீட்டையும் MSME நிறுவனங்கள் கவனமாக பாதுகாப்புடன் கையாள வேண்டும்.

இளைஞர்கள்மத்திய வயதினர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் போலிருக்கிறதே?

அதுதான்  இப்போதைய கணிப்பு. இந்த சூழலில், பரவலான வேலை இழப்புகள்  ஏற்படும் என்றாலும், அது இளைஞர் ளை விட நடுத்தர வயதினரை அதிகம் பாதிக்கும். மீண்டும் வேலை தேடும் போது, கிடைக்கக்கூடிய வருவாய் குறைவாக இருக்கக்கூடும். குறைவான வருமானமாக இருந்தாலும், நடப்பு பொருளாதார சூழல் கருதி எல்லோரும் தங்கள் எதிர்பார்ப்புகளை சீரமைத்துக் கொண்டு வேலையில் இருப்பதையே முக்கியமாகக் கருத வேண்டும். கிடைக்கும் வேலையை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதே பயனளிக்கும்.

 கொரானாவை வென்று இன்னமும் பெரும் வலிவுடன் நாம் மீண்டு எழுவோம் என்று எந்த அடிப்படையில்  கூறுகிறீர்கள்?

இந்திய பொருளாதாரம் விவசாயம், சேவை தொழில் துறைகள் என்று மூன்று தூண்களிலும் தாங்கப்பட்டு நிற்கின்றது. ஒரு சில நாடுகளைப் போல ஏதோ ஒரு துறையை மட்டும் நம்பி வாழும் நிலை இல்லை. ஏற்றுமதியின முக்கியத்துவம் இருந்தாலும், உள்நாட்டு நுகர்வை கொண்டே நம்மால் போதிய வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். அதற்குத் தேவையான பணப்புழக்கத்தை அரசும் ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தினால் நம்மால் விரைவாக மீண்டு வர முடியும்.

(பகுதி 2 நாளை வெளிவரும்)