பெங்களூருவில் கைதான 3 தீவிரவாதிகளை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக க்யூ பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கும் களியக்காவிளையில் போலீஸ் எஸ்.ஐ.யை சுட்டுக் கொன்றவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவராக இருந்தவர் சுரேஷ்குமார் (48). இவர், 2014 ஜூன் 18ம் தேதி இரவு அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள மாவட்ட இந்து முன்னணிஅலுவலகத்தை மூடிவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய போலீஸார் கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்தனர். விசாரணையில் அடிப்படைவாத இயக்கத்தைச் (தீவிரவாத இயக்கம்) சேர்ந்த சிலர் இதில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள நாகர்கோவிலைச் சேர்ந்த சையது அலி நவாஸ், கன்னியாகுமரியைச் சேர்ந்த அப்துல் சமீம் மற்றும்அவரது கூட்டாளி காஜாமொய்தீன் ஆகியோரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் பெங்களூருவில் செயல்பட்டு வந்த தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதும் அந்த அமைப்பில் இருப்பவர்கள்தான் சுரேஷ் குமார் கொலையாளிகள் தப்புவதற்கு தேவையான பண உதவிகள், ஆயுத உதவிகள் மற்றும் செல்போன் உள்ளிட்ட உதவிகள் செய்ததையும் போலீஸார் கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து பெங்களூரு சென்ற தமிழக க்யூ பிரிவு போலீஸார், அங்கு பதுங்கி இருந்த முகமது ஹனீப்கான் (29), இம்ரான்கான் (32), முகமது சையத் (24) ஆகிய 3 பேரை கர்நாடக போலீஸார் உதவியுடன் பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி கைது செய்தனர். இவர்கள் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ் குமார் கொலையாளிகள் தப்புவதற்கு உதவி செய்தவர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து க்யூ பிரிவு போலீஸார், குறிப்பிட்ட மதம் ஒன்றுக்கு எதிராக பேசி வருபவர்களுக்கு எதிரான போர் என்ற பெயரில் அந்த மதத்துக்கு எதிராக பேசி வரும் இந்து மததலைவர்களை கொல்ல பெங்களூருவை மையமாக கொண்டு அமைப்பு ஒன்றை தொடங்கி தென்னிந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சிலர் திட்டம் தீட்டினர். பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தனர். அந்த கொள்கையில், தற்போது கைது செய்யப்பட்ட 3 பேரும் இருந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் முகமது சையத் பொறியியல் பட்டம் பெற்றவர். இவர் மத்திய உளவு அமைப்பின் தொழில் நுட்பங்கள் நுழைய முடியாதபடி புது கணினி மென்பொருள் ஒன்றை உருவாக்கிஉள்ளார். அதை தீவிரவாதசெயல்களுக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது.
இவர்களின் பின்னணியில் இன்னும் பலர் ரகசியமாக இயங்கி வருகின்றனர். அவர்கள் யார், எங்கு உள்ளனர், இவர்களின் சதிச்செயல் என்ன என்பதுஉட்பட பல்வேறு தகவல்களை சேகரிக்க வேண்டியது உள்ளது. எனவே, தற்போது சிறையில் உள்ள 3 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.
போலீஸாரை மிரட்டுவதற்காக எஸ்.ஐ வில்சன் கொலையா?
எஸ்.ஐ வில்சன் கொலையில் தேடப்பட்டு வரும் தவுபீக், அப்துல் ஷமீமின் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி இருந்தனர். காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அவர்களது வீடுகளிலும் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வரும் 3 பேருக்கும் உதவி செய்ததாக பெங்களூருவில் 3 பேரை தமிழக க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இளங்கடை மற்றும் திருவிதாங்கோட்டில் உள்ள தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோரின் வீடுகளில் மீண்டும் போலீஸார் சோதனை நடத்தினர். சோதனை என்ற பெயரில் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் தகவலை அறிந்த தவுபீக்கும், அப்துல் ஷமீமும் போலீஸாரை அச்சுறுத்த இக்கொலையை செய்திருக்கலாம் என போலீஸ் வட்டாரம் தெரிவித்தது.