விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் புனரமைக்க, போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தினோம்’ என, சென்னையில் கைதான முன்னாள் ராணுவ வீரர், என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை, சேலையூர் ராஜேஸ்வரி நகர், ஆதிலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் ஆதிலிங்கம், 43; முன்னாள் ராணுவ வீரர்.
கடந்த ஆகஸ்டில், இவரை போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் வழக்கில், என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். பின், இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.
ஆதிலிங்கம் அளித்துள்ள வாக்குமூலம்:
நான், ராணுவ வீரராக பணிபுரிந்துள்ளேன். சில ஆண்டுகள், நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமியிடம், மேலாளராக வேலை பார்த்துள்ளேன். சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது, சென்னை வளசரவாக்கத்தில் இருந்த, இலங்கையைச் சேர்ந்த சபேசன் அறிமுகமானார்.
இவர், விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் புனரமைக்க, போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டார். அந்த அமைப்பின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக, நானும் அந்த தொழிலில் ஈடுபட்டேன்.
சென்னையில் தங்கியிருந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த குணசேகரன், புஷ்பராஜா, பூக்குட்டி கண்ணா மற்றும் இவர்களின் கூட்டாளி முகமது ஆஸ்மின் ஆகியோரை, சபேசன் அறிமுகம் செய்து வைத்தார். இவர்கள் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர்.
குணசேகரனின் பினாமியாக நான் செயல்பட்டேன்.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக இந்தியா வந்து, போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கடத்தும் தொழிலில் ஈடுபடுவோருக்கு, நான் அடைக்கலம் கொடுத்து வந்தேன்.
ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை, போலியாக தயார் செய்து தரும் பொறுப்பு, என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில், குணசேகரன் உள்ளிட்டோர் கைதாகி, திருச்சி மத்திய சிறை முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு இருந்தபடி, எங்களை இயக்கி வந்தனர்.
அவர்கள் உதவியுடன், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் வாயிலாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 300 கிலோ ெஹராயின், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 9 எம்.எம். ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும், 1,000 தோட்டாக்களை, கேரள மாநிலம் வழியாக, படகில் இலங்கைக்கு கடத்த ஏற்பாடு செய்தோம்.
திருவனந்தபுரம் அருகே, விழிஞ்ஞம் கடற்பகுதியில், போதை பொருள் மற்றும் ஆயுதங்களுடன், எங்கள் கூட்டாளிகள், போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். பின், என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதால், நானும் சபேசனும் சிக்கிக் கொண்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.