‘திருவாரூர் தேர் அழகு’ – இது போல் சிறப்பு பெற்ற ஊர்கள் எது? த. நவின்ராஜ், அரியலூர்.
கும்பகோணம் – கோயில் அழகு,
திருவிடைமருதூர் – தெரு அழகு,
மன்னார்குடி – மதில் அழகு,
வேதாரண்யம் – விளக்கு அழகு.
* பரதனாரே! வெளியே புறப்படும்போது சகுனம் பார்ப்பீர்களா?
ஆர். சிங்கபெருமாள், கோவை
சகுனமெல்லாம் பார்ப்பதில்லை. மனதில் கடவுளை பிரார்த்தித்துப் புறப்படறது… அவ்வளவுதான்.
புத்தர் ஒரு நாத்திகரா?
இ. ராமசாமி, நீலகிரி
புத்தர் கடவுள் பற்றிப் பேசாதவர். ஆனால் கடவுள் தன்மைக்கு எதிரானவர் இல்லை. காரணம் அவரே கடவுள் தன்மையாக வாழ்ந்தவர். புத்த நாடுகளில் அவருக்கும் கோவில் கட்டி கும்பிட ஆரம்பித்து விட்டார்களே!
அடிக்கடி மனதில் விதவிதமான ஆசைகள் ஏற்படுகிறதே, அதை தவிர்க்க முடியுமா?
பி. லாவண்யா, தேனி
ஆசைகள் எப்படிப்பட்டது என்று சொல்லலையே! நல்ல ஆசைகள் நல்லது. தப்பான ஆசைகள்தான் கூடாது. ஜாக்கிரதை! தப்பான ஆசைகள் எழுந்தால் அதை சரிசெய்ய இறைவனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்வது ஒன்றுதான் நன்மை தரும் வழி.
பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் ஏன்?
அன்று நாம் தோப்புகரணம் என்று அழைத்தோம். இப்போது அது “Super Brain Yoga’ என்ற பெயரில் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தினசரி காலை மாலை 20 தோப்புகரணம் செய்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக தொப்பை உள்ளவர்களுக்கு தோப்புக்கரணம் ஒரு வரப்பிரசாதம்.
* காவிரி பிரச்சனை பற்றி சமீபத்தில் நடிகர் சிம்பு தெரிவித்த கருத்து பற்றி?
ச.சாய்பிரியா, ஈரோடு
சிம்பு வாழ்க்கையில் இதுவரை செய்த ஒரே நல்ல காரியம் இதுதான். அதனால் சிம்புவுக்கு ஒரு சபாஷ் போடலாமே!
பிரதமர் மோடிக்கு திமுக கூட்டணி காட்டிய கருப்புக் கொடி ஆர்பாட்டம் பற்றி?
த. ராஜ்குமார், சிவகங்கை
சென்னையில் ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கான துவக்க விழா. ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – இதற்காக பிரதமருக்கு நன்றி கூற துப்பில்லாத கயவர்களின் ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மூவாயிரம் பேர். ஆனால், கண்காட்சி காண சென்றவர்கள் மூன்று லட்சம் பேர்.