திருடனுக்குத் தேள் கொட்டுகிறது

தமிழக பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்து பதவிக்கு வந்தவர்கள் தாங்கள் போட்ட முதலை எடுக்க லஞ்ச லாவண்யங்களில் ஈடுபட்டு வந்தனர். தமிழக கவர்னரின் முயற்சியால் ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சிலர் கைதாகி சிறைக்கும் அனுப்பப்பட்டனர். நேர்மையாளர்கள் கவர்னரின் நடவடிக்கைகளை ஆதரித்தும், பாராட்டியும் வருகின்றனர்.

அதிமுகவில் நிலவும் பூசலை சாதகமாகப் பயன்படுத்தி எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட முடியுமா என்ற திமுகவின் கனவு பலிக்கவில்லை. தங்களுக்கு சாதகமாக கவர்னர் செயல்படாததால் கவர்னரையே துரத்திவிட வேண்டும் என்று நினைத்து அவர்மீது புழுதிவாரி இறைத்து வருகின்றனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த ஒரு சாதாரண சம்பவத்தை ஊதிப் பெரிதாக்கி கவர்னர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கவர்னரை ராஜினாமா செய்யச் சொல்ல திமுகவிற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

பாலியல் புகார் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட்டுள்ளார். கவர்னர் எப்படி விசாரணை குழு நியமிக்கலாம் என்று ஸ்டாலின் வகையறாக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பல்கலைக் கழக விவகாரங்கள் பற்றி முடிவெடுக்க வேந்தர் என்ற முறையில் கவர்னருக்கு மட்டுமே உரிமை உண்டு.

கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நிர்மலா தேவி விவகாரங்களில் கவர்னருக்கும் தொடர்பு உண்டு என்று சொல்வது அபத்தமானது. சந்தானம் கமிட்டி மட்டுமில்லாமல் சிபிசிஐடியும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

கழகங்களின் நீண்டகால தர்பாரில் நடந்த உயர்கல்வித்துறை வண்டவாளங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடப்போகிறதே என்று பதறுகிறவர்கள்தான் கவர்னருக்கு எதிராகப் போராட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பது பலரின் சந்தேகம்.