புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், இந்தியா கடந்த ஆண்டு, 10 லட்சம் வேலை வாய்ப்புகளை பதிவு செய்துள்ளதாக, ஐ.ஆர்.இ.என்.ஏ., எனும் சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 2022ம் ஆண்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மொத்தம் 9.88 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கி உள்ளது. இதில், புனல் மின் துறை, 4.66 லட்சம் வேலைவாய்ப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதை தொடர்ந்து, சோலார் போட்டோவோல்டிக் துறை, 2.82 லட்சம் வேலைவாய்ப்பு களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில், ஆன் கிரிட் சோலார் போடோவோல்டிக் துறை, 2.01 லட்சமும், ஆப் கிரிட் சோலார் போடோவோல்டிக் துறை, 80,000 வேலைவாய்ப்புகளும் அடங்கும்.
மேலும், இந்தியாவின் சோலார் திறன், 2021ல் 10.3 ஜிகாவாட்டாக இருந்த நிலையில், அது 2022ல் 13.5 ஜிகா வாட்டாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு சோலார் மாட்யூல் தயாரிப்பு திறனும், 10.4 ஜிகாவாட்டில் இருந்து, 24.7 ஜிகா வாட்டாக உயர்ந்து உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.