பிரிவினை பேசுது வைகோ கட்சி காத்திருக்கின்றன களியும் கம்பியும்

திராவிட அமைப்புகளில் ஒன்றான ம.தி.மு.க.  செப்டம்பர் ௧௫ல் அன்று சென்னையில் நடத்திய அண்ணா பிறந்த நாள் மாநாட்டில் நிறைவேற்றியது. தேசிய ஒருமைப்பாட்டிற்கு உலை வைக்கும் தீர்மானம்.

இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் சமூக, மொழி, பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்து, தனித் தனி தேசிய இனங்களின் அடையாளங்களை நிலை நாட்ட இந்தியா என்பது இனி ”இந்திய ஐக்கிய நாடுகள்” என்றே அழைக்கப்பட வேண்டும்.  அது  தான் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்று கூறி வரும் அமைப்புகளின் கோட்பாட்டை முறியடிக்க வல்ல அரசியல் கருவியாக அமையும் என்கிற தீர்மானம் அப்பட்டமாக பிரிவினையை தூண்டுவதாக அமைந்துள்ளது.

அடிப்படையிலேயே, திராவிட இயக்கங்கள் பிரிவினையை தூண்டுகின்ற அமைப்புகளே.   தி.மு.க.வின் பிதாமகன் அண்ணாதுரை ‘இந்தியா ஒரு கண்டம், அதில் பல்வேறு இனங்கள் பிரிட்டிஷாரின் ஆட்சியில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறினால், இந்தியாவில் ரத்த களறி ஏற்படும்’ என சுதந்திரத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்.அவரது பிறந்த நாளில் ம.தி.மு.க போட்ட தீர்மானம் வேறு எப்படி இருக்கும்?

1952-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.  இதில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி, ஒருவழியாக தணிந்த பின்னர், அதாவது 1956 நவம்பரில், மொழிவாரி மாநில புனரமைப்புக்குப் பிறகு திராவிட நாடு கோரிக்கையை ஈ.வே.ரா முன் வைக்கவில்லை. மாறாக தனித்தமிழ்நாடு  என்றே அவர் பேசி வந்தார்.  ஆனால் தி.மு.க.வினர் தொடர்ந்து திராவிட நாடு என பேசி வந்தார்கள்.  இவர்கள் ஒருபோதும் பிரிவினையை கைவிடவில்லை.

அண்ணாதுரை பிரிவினையை மையமாக வைத்தே மாநாட்டுத் தீர்மானங்களை வடிவமைத்
தார். 1953 ஜூனில் விருதுநகரில் நடந்த மாநாட்டில், அடிப்படை பிரச்சினை திராவிட நாடு திராவிடருக்கே என்பது தான்.  அதற்கு தேர்தல் பயன்பட்டால், பயன்படும் சூழ்நிலை ஏற்பட்டால், தக்க வழிவகை முறைகளை வகுத்துக் கொண்டு திமுக தேர்தலில் அக்கறை காட்டும் என்றார்.  1956 மே மாதம் திருச்சி மாநில மாநாட்டிற்கு பின் தேர்தலில் போட்டியிடுவது என அவர் கட்சி முடிவு எடுத்த பின்னர், தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை, நேரடியாக பிரிவினை வேண்டும் என கேட்காமல், மாநிலங்கள் விருப்பப்பட்டால் பிரிந்து செல்லக் கூடிய மாநில சுய நிர்ணய உரிமையை வழங்கும் வகையில் அரசியல் சாஸனம் திருத்தப்பட வேண்டும் என கூறியிருந்தது. 1957 தேர்தலுக்கு பின்னர் தி.மு.க. மாவட்ட மாநாடுகளில் கூட திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள்!

1962-ல் இந்திய சீனா போர் மூண்டபோது,  இந்தப் போர் சமயத்தில் தான் ‘நாட்டுக்கு ஒரு ஆபத்து எனும் போது, கட்சி வேறுபாடுகளை மறந்து கை கோர்ப்போம்.  அதே சமயம் பிரிவினை கோரிக்கைகளுக்கான காரணங்கள் அப்படியே உள்ளன என’  அண்ணாதுரை கூறினார்.

பிரிவினைவாத தடுப்பு மசோதா வந்த போது, நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி நாஞ்சில் மனோகரன், திராவிட நாடு அடைவதே திமுகவின் லட்சியம் என்றார். கள்ளத் தோணியில் இலங்கை சென்று வந்தவரை, சுதந்திரமாக உலவ விட்டதால் ஏற்பட்ட விளைவு, பிரிவினை கோஷம்.   இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

அதே ம.தி.மு.க மாநாட்டின் இன்னொரு தீர்மானம்  காஷ்மீர் பிரச்சினையில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட வரலாற்றுப் பிழையைச் சரிசெய்து, காஷ்மீர் மாநிலத்தின் தனித் தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்கிறது.

ஈழப் பிரச்சினையை கைவிட்டு விட்டு, ம.தி.மு.க காஷ்மீர் பிரச்சினையை கையில் எடுத்துள்ளதா? இந்தியாவுடன் இணைந்த சமஸ்தானங்களுக்கு கொடுக்காத சலுகை காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பாமல், பா.ஜ.க.வின் மீதும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீதும் குற்றம் சுமத்துவதுதானே இவர்களின் அரசியல்? ஷேக் அப்துல்லாவின் குடும்பத்தின் ஆதிக்கம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை எவ்வாறு சீரழித்தது என்பதை ம.தி.மு.க மறைக்கிறது. அப்பாவி மாணவர்களையும்,  பொது மக்களையும் அந்த சக்திகள் ஜிகாதிகளாக மாற்றியதெல்லாம் ம.தி.மு.கவுக்கு எங்கே புரியப்போகிறது.