பிரயாக்ராஜில் ‘நேத்ர கும்ப’ புனித பூமியில் புதுமையான சேவை!

தமஸோமா ஜ்யோதிர்கமய என்பதன் பொருள். ‘கடவுளே எங்களை இருட்டிலிருந்து அறிவு என்ற ஒளியிடம் அழைத்து செல்’. இது தொன்று தொட்டு நமது கலாச்சாரத்தின் அங்கம். ஒளி காண முடியாதவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர் என்பதுதான் மிகவும் வருந்தத்தக்கது.

இந்தியாவில் பார்வையற்றோர் ௦.65 சதவீதம் என்பது புள்ளிவிவரம். அதாவது  50 லட்சம் பேர்! நாட்டின் எல்லா பாகங்களிலிருந்தும் பிரயாக்ராஜில் கும்பமேளாவிற்காக ஒன்று கூடும் பக்தர்களின் சங்கமத்தை பயன்படுத்தி, பார்வை குறைபாட்டால் துன்பத்தில் வாடும் மக்கள் வாழ்வில் நெடுங்கால மாற்றம் கொண்டுவர முடிவு செய்தார் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகிலபாரத இணை பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ண கோபால். அப்படி உருவானதுதான் அற்புதமான ‘நேத்ர கும்ப’.

‘நேத்ர கும்ப’ பின்னணி

‘நேத்ர கும்ப’ நடத்த முன்னோட்டமாக பலமுறை கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அறிமுகமாக 10,000 கண்ணாடிகள் மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. ஜனவரி 12லிருந்து மார்ச் 4 வரை ஏற்பாடு செய்யப்பட்ட கும்பமேளாவில் பத்து லட்சம் பக்தர்களின் கண்கள் இலவசமாக பரிசோதிக்கப்பட்டு ஒன்றரை லட்சம் கண்ணாடிகள் விநியோகிக்கப்படுவதற்கு இது முன்னோடியாக அமைந்தது. ‘‘நமது லட்சியம் இதோடு முடிந்து விடக்கூடாது, கண்களின் மற்ற குறைகள் தீர்க்க தேவையான அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்தோம்” என அமைப்பாளர்கள் தெரிவித்தார்கள். ‘நேத்ர கும்ப’ மேளாவை நடத்திய அமைப்பு நாகபுரியை தலைமையகமாகக் கொண்ட தன்னார்வ அமைப்பான ‘சக்ஷம்’ .

இந்த அமைப்பு கண்களின் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பணியில் தன்னை சமர்ப்பித்து கொண்டுள்ளது. சேவை மனப்பான்மை கொண்ட அநேக நிறுவனங்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு வருகிறது. சேவை உணர்வுள்ள டாக்டர்கள், அறுவை சிகிச்சை மாணவர்கள் ஆகியோரையும் இதில் ஈடுபடுத்த தேசிய மருத்துவர்கள் அமைப்பின் (என்.எம்.ஓ) இணைப்புப் பெற்றுள்ளது.

சவால்களை சந்தித்த சக்ஷம்!

இந்த பெரிய சேவையை ஏற்பாடு செய்ய தேவையான பொருட்களை தயார்செய்வது பெரிய சவாலாக இருந்தது. முதன்முதலாக ஒரு நாளைக்கு ஏறக்குறைய 5,000 முதல் 6,000 வரை கண்பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதாவது ஒரு பெரிய மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்படும் சோதனைகளுக்கு இது ஈடாகும். இதற்காக 400 கண்சிகிச்சை நிபுணர்களும் விழி அளவு எடுக்கும் தொழில்நுட்ப நிபுணர்களும் தேவைப்பட்டனர். இவர்களும் ஏறக்குறைய 200 தன்னார்வலர்களான மாணவர்களும் NMO அமைப்பின் உதவியுடன் இந்தச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்பொழுதுதான் 50 நாட்களுக்குள் ஒரு லட்சத்திற்கும் மேலாக கண்ணாடிகளைக் கொடுக்கும் இலக்கை அடையமுடியும் (அடைந்து விட்டார்கள் என்பது கடைசி செய்தி).

இதோடு கூட அனைத்து நோயாளிகளின் விவரங்களையும், குறிப்பெடுத்துக் கொள்ள உயர்நிலை தொழில்நுட்பம் தேவைப்பட்டது. இதற்காக ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டது. இதற்குத் தேவையான இடம், மருந்தகம், சோதனைச்சாலை, நோயாளிகளின் பதிவு, சேவை செய்பவர்களுக்கு உணவு, தங்கும் இடம் எல்லாவற்றையும் உ.பி. ஆட்சியாளர்களே ஏற்பாடு செய்ய உதவினார்கள். மொத்தம் எட்டு தினங்களுக்குள் எல்லா ஏற்பாடுகளும் உன்னதமான நிலையில் தயார் ஆயின.

‘நேத்ர கும்ப’த்தில் உள்ள தங்கும் அறைகளில் 300 முதல் 400 பேருக்கு உணவும் தங்கும் வசதியும் இருந்தன. இதுமட்டுமல்லாது, வெளி நோயாளிகளுக்கும் அறைகள், இலவச பரிசோதனை அறை, மருந்துக்கடை, இலவச மருந்துகள்!

சுறுசுறுப்பான ‘நேத்ர  கும்ப’

எல்லா சேவைகளுக்கும் வேறு வேறு கவுன்ட்டர்கள் இருந்ததால், ஒவ்வொரு நோயாளியும் 3 முதல் 5 நிமிடங்கள் வரை தான் செலவு செய்ய வேண்டியிருந்தது.

ஜனவரி 12 விவேகானந்த ஜெயந்தி தினத்தன்று, மிகவும் உற்சாகத்துடன் நல்லமைப்புடன் ‘நேத்ர கும்ப’ பணி தொடங்கியது.

முதல் நாள் 700 கண்ணாடிகள் இலவசமாக விநியோகிக்கப் பட்டன. நாளுக்கு நாள் பன்மடங்காகப் பெருகி, பிப்ரவரி வரைக்கும் 5,000 நோயாளிகளுக்கு பரிசோதனை நடந்தேறியது.

சுமார் 3,000 – 4,000 கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டன. பிப்ரவரி 3ம்தேதி வரை 72,000 பேருக்கு பரிசோதனை செய்து, 53,000 கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டன.

இது தேசத்திலேயே, ஏன் உலகத்திலேயே, ஐம்பது நாட்களுக்குள் ஏற்பாடு செய்து சிகிச்சை அளிக்கப்பட்ட பெரிய முகாம்களுள் ஒன்றாகும்.

பார்வையின்மை இல்லாத பாரதம் என்ற லட்சியத்தை அடையும் திசையில் எடுக்கப்பட்ட முதல் உறுதியான காலடிவைப்பு இது என்பது பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.