ஒன்பது பில்லியன் பவுண்ட் (அதாவது) 90,000 கோடி ரூபாய் மதிப்பில், ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பிரதமர் மோடியின் மூன்று நாள் லண்டன் பயணத்தின்போது மொத்தம் 27 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடி நவம்பர் 12 காலை, இங்கிலாந்து பயணத்தை தொடங்கினார். டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வழியனுப்பி வைத்தார். இங்கிலாந்து நேரம் காலை 10.00 மணிக்கு அவரது சிறப்பு விமானம் லண்டன் மாநகரில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தை அடைந்தது. அவரை இங்கிலாந்து நாட்டின் அரசுப் பிரதிநிதிகளும் இந்தியாவின் தூதரக அதிகாரிகளும் அன்புடன் வரவேற்றனர். விமான நிலையத்தில் அவருக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்து மத குருமார்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து நேராக, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இங்கிலாந்து நாட்டுக்கு குடிபெயர்ந்து, அந்நாட்டின் பிரஜைகளாக வாழும் பஞ்சாபியர் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, இங்கிலாந்து நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர் ஆற்றும் பணிகள் குறித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டார்.
மோடி லண்டன் மாநகரில் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த செயின்ட் ஜேம்ஸ் கோர்ட் ஹோட்டலுக்கு வெளியே, மோடியை பார்ப்பதற்காக ஏராளமான இந்தியர்கள் பல மணிநேரம் காத்திருந்தனர். மழை பெய்து கொண்டிருந்த அந்த நேரத்திலும், மலர்ந்த முகத்துடன் அவர்களை நோக்கி வந்த மோடி, அவர்களின் கைகளைப் பற்றிக்கொண்டு ஆனந்தம் வெளிப்பட அவர்களின் அன்புக்கு நன்றி கூறினார். அதன் பின், மோடிக்கு இங்கிலாந்து அரசு சார்பாக அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு நாடுகளும் பரஸ்பரம் ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் சூரிய ஒளி மின்சாரம் ஆகிய துறைகளில் எவ்வாறு ஒத்துழைப்பு நல்குவது என்றும் கையொப்பம் இடப்படவிருக்கும் 27 ஒப்பந்தங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிகழ்ந்த பின்னர், மோடியும் கேமரூனும் செய்தியாளர்களை சந்தித்து, நாடுகளுக்கிடையிலான பாரம்பரிய நட்புணர்வு மற்றும் கலாச்சார பகிர்வு குறித்து மகிழ்ச்சியை எடுத்துரைத்தனர். அண்மையில் இந்தியாவின் சில பகுதிகளில் மதம், ஜாதி அடிப்படையில் சகிப்புத்தன்மைக்கு எதிராக நடந்து வரும் நிகழ்ச்சிகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த மோடி, இந்தியா அஹிம்சைக்கு எடுத்துக்காட்டான புத்தர் பிறந்த புண்ணிய பூமி. இந்தியாவில் சகிப்புத்தன்மைக்கு எதிராக ஒரு சிலர் பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம் என்று கூறினார். இரு நாடுகளுக்கும் இடையில் அணு மின்சாரப் பகிர்வுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்பதை டேவிட் கேமரூன் மிகவும் பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும், இதன் ஒரு பகுதியாக, சூரிய ஒளியைப் பயன்படுத்தி 3200 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் தயாரிக்க, ஒ.பி.ஜி. பவர் வென்ச்சர் என்ற இங்கிலாந்து நிறுவனம் சார்பில், தமிழ்நாட்டில் சுமார் 3.4 பில்லியன் பவுண்ட் மதிப்பில் மின் நிலையம் அமைக்கவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மோடியின் அடுத்த நிகழ்ச்சி இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், நாடாளுமன்றத்தின் ராயல் கேலரியில் (கீணிதூச்டூ எச்டூடூஞுணூதூ) உரையாடச் சென்றார் மோடி. இன்றைய காலத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதுவும் நடைபெறாத நிலையிலும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் மோடியை சந்திக்கவும் அவரது உரையைக் கேட்கவும் குழுமி இருந்தனர். சபாநாயகர் ஜான் பெர்கவ், மோடியை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து பேசியபோது, மோடி இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில் பிரசித்தி பெற்றவர். சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் உலக தலைவர்களில் மோடியும் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார். அதன்பிறகு பேசிய மோடி, இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள கலாச்சார, விளையாட்டு துறைகளில் நிலவிவரும் புரிந்துணர்வை பெருமையாக விளக்கினார். சுதந்திரம் பெற்றபின் இந்தியா பல்வேறு துறைகளில் அடைந்த முன்னேற்றத்தை நினைவு கூர்ந்த அவர், மேலும் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க இரு நாடுகளும் கரம் கோர்த்து பயனிக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
கில்ட் ஹால் என்ற இடத்தில் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த முதலீட்டாளர்களை சந்தித்த மோடி, அந்நிய முதலீட்டுக்கு இந்தியா எப்பொழுதும் தனது கதவுகளைத் திறந்தே வைத்திருக்கின்றது. முதலீட்டுக்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா கணிசமான அளவிற்கு முன்னேறியுள்ளது என்பது பெருமிதம் அளிக்கும் ஒன்றாகும். தற்போது கையெழுத்திடப்பட்டுள்ள 9 பவுண்ட் பில்லியன் அந்நிய முதலீடு மட்டுமல்லாமல், இங்கிலாந்து நாட்டிலிருந்து மேலும் பல முதலீடுகளை எதிர்பார்க்கின்றோம். அதற்கேற்ப வணிக, பொருளாதார சூழல் இந்தியாவில் நிலவி வருகின்றது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறினார்.
மோடி அவர்களின் வருகையை சிறப்பிக்கும் வகையில், இங்கிலாந்து பிரதமர் தங்கும் சிறப்பு மாளிகையான செக்கர்ஸ் என்ற இடத்தில் இரவு உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.