பிரச்சினை

பால்காரர் ஒருவர் தன் பசுவை இழுத்துக் கொண்டு ரோட்டு ஓரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்த பசு, திடீரென அடம்பிடித்து நடுரோட்டில் அமர்ந்து கொண்டது. அகலம் குறைந்த அந்த சாலையில், எந்த வாகனங்களும் செல்ல முடியாதபடி பசு படுத்துவிட்டது. பால்காரர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை. அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை. அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப் பார்த்தார், நகராமல் நின்ற பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தது. மல்யுத்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார். ஒரு பசுவை ரோட்டிலிருந்து நகர்த்த மூன்று பேர் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளைப் பார்த்து சிரித்தார். மூன்று பேரையும் நகரச் சொல்லி விட்டு அந்த மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். ம்ஹும்… பசு அசரவில்லை. அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான். அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவின் முகத்தருகே காட்டினான். பசு புல்லை சாப்பிட எழுந்தது. சிறுவன் புல்லை பசுவிடம் காட்டி கொண்டே நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது.
இப்படிதான், தங்கள் பலங்களை காட்டி பிரச்னைகளை சீர் செய்ய சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சில எளிய நிகழ்வுகளில் பிரச்சனைகளை சீர் செய்ய முடியும் என்பதை அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.