விழா ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், ” திருவள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து மன்னராக சித்தரிப்பதன் வாயிலாக, தமிழர்களின் அடையாளங்களை மாற்ற முயற்சி நடக்கிறது” என்றார். அதற்கு, பொதுமக்கள், ஹிந்து அமைப்பு மற்றும் பா.ஜ.க தரப்பில் பலர் கண்டனம் தெரிவித்தனர். வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், “ஹிந்து மதம் என்ற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை. சைவம், வைணவம், சமணம் தான் இருந்தது. ஹிந்து என்பது வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர்” என்றார். இதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து கமல் தனது நிலைப்பாட்டில் இருந்து மறைமுகமாக பின்வாங்கியுள்ளார். கமலின் நண்பரும், எழுத்தாளரும், ஓய்வுபெற்ற மத்திய அரசு செயலருமான பி.ஏ.கிருஷ்ணன் தனது முக நூல் பக்கத்தில், “கமலுடன் கலந்துரையாடினேன். 1ம் நுாற்றாண்டில், ராஜமுந்திரி என்ற இடம் இல்லை. அது அப்போது ராஜமகேந்திரவரம் என்று அழைக்கப்பட்டது. அதுபோல எளிமையானதே ஹிந்து மதம் பற்றி, நான் சொன்ன கருத்து. ராஜராஜ சோழன் காலத்தில், சிவனை வழிபட்டவர்கள், ‘சைவர்’ என்றும், விஷ்ணுவை வழிபட்டவர்கள் ‘வைணவர்’ என்றும் அழைக்கப்பட்டனர். இந்த மறுக்க முடியாத உண்மையைத் தான் கூறினேன். ஹிந்து மதம் இருப்பதை நான் மறுக்கவில்லை’ என்று கமல் என்னிடம் கூறினார். இதை பொதுவில் பகிர்ந்து கொள்ளவும் அனுமதித்தார்” என கூறியுள்ளார்.