பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தௌலத்பூர் வார்டு எண். 19ல் உள்ள ஸ்ரீ ராம் சரண் கோயில் எதிரில், பா.ஜ.கவினரின் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 40 குண்டர்கள் அங்கு வந்து பா.ஜ.க தொண்டர்களை ஆயுதங்களால் தாக்கினர். இத்தாக்குதலில் பா.ஜ.கவினர் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. தகவல் அறிந்து அங்கு சென்ற பதான்கோட் பா.ஜ.க வேட்பாளரும், பஞ்சாப் பா.ஜ.க தலைவருமான அஸ்வனி சர்மா, நிலைமையை ஆய்வு செய்தார். பிறகு, ‘பஞ்சாபில் குண்டர்கள் ராஜ்ஜியத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அரசு நிர்வாகம், காவல்துறையின் தோல்வியை இது பிரதிபலிக்கிறது. மேற்கு வங்கத்தில் வன்முறையை தூண்டிய மமதா பானர்ஜியின் வழிமுறையை பஞ்சாபில் பின்பற்றுகிறீர்களா?’ என கேட்டார்.