பாரதம், பாகிஸ்தான் இடையே ஆறு மோதல்களிலும் பாரதம் அடக்கி வாசித்தே வாகைசூடிய அருமை!

பாகிஸ்தானின் ஆதரவுடன் 1947 அக்டோபர் 22 அன்று அடியாட்கள் ஜம்மு–-காஷ்மீருக்குள் ஊடுருவி, முசாபராபாத், பாரமுல்லா போன்ற நகராட்சிகளைக் கைப்பற்றி, ஸ்ரீநகர் நோக்கி முன்னேறியபோது, முதல் காஷ்மீர் போர் தொடங்கியது. தனது அதிகாரம் உடனடியாக சிதைவடையும் நிலையை எதிர்கொண்ட மகாராஜா ஹரி சிங், அக்டோபர் 26 அன்று இணைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றி, மாநிலத்தை முறையாக பாரதத்துடன் இணைத்தார். அடுத்த நாள், பாரத ராணுவ வீரர்கள் விமானத்தில் சென்று ஸ்ரீநகரில் இறங்கினார்கள்; ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டிருந்த விமான ஓடுதளத்தைப் பாதுகாத்தது, படையெடுப்பாளர்களைத் துரத்துவதில் கைகொடுத்தது. பள்ளத்தாக்கு, ஜம்மு, பூஞ்ச், லடாக் வரை மோதல்கள் பரவியும், பாரத ராணுவத்துக்கே வெற்றி. இந்த மோதலை ‘திருப்பி அடித்துப் பெற்ற வெற்றி’யாக பாரதம் மதிப்பிட்டது. ஸ்ரீநகர் பாதுகாக்கப்பட்டது, காஷ்மீர் இணைப்பு உறுதிப்படுத்தப்பட்டது, பாரத ராணுவம் லேசுப்பட்டதல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டது. போராட்டம் நீடிக்கும் என்பதன் முதல் அத்தியாயம் இந்த மோதல். ஸ்கோர்: பாகிஸ்தானுக்கு எதிராக
1-–0.

ஆப்ரேஷன் ஜிப்ரால்டர் எனும் பாகிஸ்தானின் ரகசிய நடவடிக்கை, ஆகஸ்ட் 1965ல் தொடங்கியது. ஆயுதமேந்திய கலகக்காரர்களைப் பயன்படுத்தி ஜம்மு – காஷ்மீர் பகுதிகளில் ஊடுருவ முயன்றது. கிளர்ச்சியைத் தூண்டுவதற்கு மாறாக, பாரத ராணுவத்தினருடன் இணைந்து, உள்ளூர் மக்கள் உறுதி காட்டியதால் ஊடுருவல்காரர்கள் திறம்பட முறியடிக்கப்பட்டனர். பதிலடியாக தீர்க்கமான ராணுவ நடவடிக்கைகளை பாரதம் மேற்கொண்டு, உரி-, பூஞ்ச், ஹாஜிபீர் கணவாய் உள்ளிட்ட போர் நிறுத்தக் கோட்டில் உள்ள முக்கிய நிலைகளைக் கைப்பற்றியது. இதன் மூலம் மேலும் ஊடுருவல்களை வெற்றிகரமாகத் தடுத்தது. செப்டம்பர் 1 அன்று, பாகிஸ்தான் ஆபரேஷன் கிராண்ட் ஸ்லாம் தொடங்கியது; பாரத ராணுவம் தாக்குதலை திறம்பட எதிர்கொண்டது. செப்டம்பர் 23 அன்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நேரத்தில், பாரதம் கணிசமான வியூக ஆதாயம் கைவரப் பெற்றிருந்தது. காஷ்மீரைக் கைப்பற்ற அல்லது நீடித்த பிராந்திய கையகப்படுத்தல்களை அடைய பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வியடைந்தன. அதே நேரத்தில் பாரதப் படைகள், எதிரிக்கு அதிக உயிரிழப்புகளையும் உபகரணங்கள் இழப்பையும் ஏற்படுத்தின. இந்த மோதலும் நம் ராணுவ வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தியது. இதன் விளைவு, இரண்டாவது பாரத–-பாகிஸ்தான் போரில் பாரத ராணுவ வெற்றிகளில் மற்றொரு அத்தியாயம் சேர்ந்தது. ஸ்கோர்: பாகிஸ்தானுக்கு எதிராக 2-–0.

மூன்றாம் போர் (1971) பாகிஸ்தானை இரண்டு துண்டாக்கியது. விரைவான ராணுவ நடவடிக்கை மூலம் வங்கதேசம் ஸ்தாபிக்கப்பட்டது. அதன்படி, கிழக்கு பாகிஸ்தானில் நடந்த ராணுவத் தாக்குதல் கடும் மனிதாபிமான நெருக்கடியை கட்டவிழ்த்து விட்டிருந்தது, இதன் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் பாரதத்தில் தஞ்சம் புகுந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் இனப்படுகொலை, அகதிகளின் அவலநிலை, பரவலான குழப்பம் ஆகியவை பாரதத்தை விரைவாகச் செயல்பட கட்டாயப்படுத்தின. இறுதியில் 1971 டிசம்பரில் போர் தொடங்கியபோது, பாரத ராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்குள் பல முனைகளில் முன்னேறியது; விமானப்படை ஒரு சில நாட்களுக்குள் வான்வழி மேலாதிக்கத்தை அடைந்தது; கடற்படை மிகத் தீர்க்கமான தாக்குதலை நடத்தியது. பதின்மூன்று நாட்களுக்குள், டாக்கா சரணடைந்தது, 93,000 பாகிஸ்தான் துருப்புகள் சரணடைந்தனர், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரிய சரணாகதியைக் குறிக்கிறது. ஒரு புதிய இறையாண்மை கொண்ட அமைப்பாக வங்கதேசம் உருவானது. பாகிஸ்தானுக்கு எதிராக 3–0 என்ற ஸ்கோர் கணக்கில் பாரதம் திட்டவட்டமாக முன்னேறியது.


மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவத்தினரும் பினாமிப் படைகளுமாக 1998 குளிர்காலத்தில் காஷ்மீரில் உள்ள வியூக சமநிலையை மாற்றிப் போட முயன்றனர். கார்கில், டிராஸ், படாலிக் பகுதிகளுக்குள் ஊடுருவி வலைத்துப் போட்டுக் கொள்ளும் வியூகத்துடன் பீரங்கி ஆதரவால் வலுப்படுத்தப்பட்ட பாகிஸ்தானின் வடக்கு லைட் காலாட் படை, சமீபத்திய லாகூர் பிரகடனத்தை மீறி, இரு நாடுகளும் அமைதிக்கு உறுதியளித்திருந்த போதிலும், பாரத எல்லைக்குள் ஊடுருவத் திட்டமிட்டது. ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் சஃபேத் சாகர் ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் பாரதம் உற்சாகத்துடன் எதிர்வினையாற்றியது, முக்கிய சிகரங்களை வெற்றிகரமாக மீட்டெடுத்தது. சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் கணிசமாக தனிமைப்படுத்தப்பட்டது; நிபந்தனையற்ற பின்வாங்கலை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜூலை 26 ஆம் தேதிக்குள், அனைத்து ஊடுருவல்காரர்களும் வெளியேற்றப்பட்டனர். பாகிஸ்தானுக்கு இந்த மோதல் ஆழ்ந்த அவமானம் என்பதைப் பிரகடனப்படுத்தியது; மாறாக, பாரதத்தின் வீரம், கெட்டிக்காரத்தனமான வியூகம், மீள்தன்மை இவற்றுக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. ஸ்கோர்: 4–0.

பாரத நாடாளுமன்றத்தின் மீது, 2001 டிசம்பர் 13 அன்று நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஜிஹாதி அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ரகசிய ஆதரவை பாரதம் உரக்கச்சொல்ல முடிந்தது. லஷ்கர்-–இ-–தொய்பா, ஜெய்ஷ்-–இ–-முகமது ஆகிய அமைப்புகளை இந்த சம்பவத்துடன் வெளிப்படையாக தொடர்புப்படுத்தியதுடன் ஐ.எஸ்.ஐ இதில் சம்பந்தப்பட்டிருப்பதும் அம்பலமானது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி, தளவாட உதவி இரண்டையும் வழங்கியதாக மேற்கத்திய உளவு அமைப்புகளிடமிருந்து கிடைத்த உறுதிப்படுத்தும் சான்றுகள், பாகிஸ்தானைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தின. சர்வதேச அழுத்தம் திணிக்கப்பட்டதால், ஜனாதிபதி முஷாரஃப் பயங்கரவாதப் பிரிவுகளை பகிரங்கமாகக் கண்டிக்கவும், ஐந்து ஜிஹாதி அமைப்புகளுக்கு தடை விதிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டார். பாரதம், மீண்டும் ஒருமுறை, தனது ஒழுக்கமான உத்தி, வியூகப் பொறுமை, தாங்கு திறன் இவற்றால் பாகிஸ்தானை அடிபணியச் செய்ய முடிந்தது. ஸ்கோர்: 5–-0.

பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 அன்று, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து, மே மாதம், பாகிஸ்தனுக்குள் இருந்த பயங்கரவாத பாசறைகளை அழிக்க விரைவான, உயர்-துல்லியமான தீர்க்கமான ராணுவ பதிலடியான ஆபரேஷன் சிந்தூரை பாரதம் தொடங்கியது. மே 7 முதல் 10க்குள் பயங்கரவாத உள்கட்டமைப்புகள், ராணுவ கட்டமைப்பு என இரண்டையும் வெற்றிகரமாக குறிவைத்ததன் மூலம், பாரதம் மீண்டும் எதிரி அடிக்க கை ஓங்க முடியாதபடி முடக்கியதோடு, எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை நிரூபித்து பாகிஸ்தானை மடக்கியது. ஸ்கோர்: 6-–0.

கிட்டத்தட்ட எட்டு தசாப்தங்களாக, பாகிஸ்தானுடனான பாரதத்தின் தொடர்பில் மீள்தன்மை, வியூகத் தெளிவு, மட்டுப்படுத்தப்பட்ட ராணுவ அணுகுமுறை இவை தெளிவாகத் தெரிகின்றன. முதல் காஷ்மீர் போரின் தொடக்கத்திலிருந்து ஆபரேஷன் சிந்தூர் வரை, பாகிஸ்தானுடனும் அதன் பினாமியான பயங்கரவாதிகளுடனும் நடந்த ஒவ்வொரு ராணுவ மோதலும் பாரதத்தின் இறையாண்மை, வியூகப் படலம் ஆகியவற்றை வலுப்படுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 6-–0 என்ற உறுதியான வெற்றியில் உச்சத்தை எட்டிய ஆபரேஷன் சிந்தூர், ‘இதுதான் 21 ஆம் நூற்றாண்டிற்கான பாரத ராணுவக் கோட்பாடு’ என பிரகடனம் செய்கிறது: வியூகப் பொறுமை, தொழில்நுட்ப சுயசார்பு, மின்னல்வேக துல்லியம், அளந்தெடுத்து அடிகொடுப்பது ஆகியவற்றின் கச்சிதமான சங்கமமே அது.
கட்டுரையாளர்: ‘லா அண்ட் சொசைட்டி அல்லயன்ஸ்’ எனும் டெல்லி சிந்தனைக் குழு சேர்மன்; புவிசார் அரசியலில் சிறப்பு கவனம் செலுத்துபவர்.