மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பாரதத்தில் உள்ள அனைவரும் நமது அங்கத்தினர். அனைவரின் சிந்தனையும் ஒன்றாக இருக்க வேண்டும். அவர்களின் சிந்தனையில் ஏதேனும் குழப்பமோ அல்லது வித்தியாசமோ இருந்தால் நாம் அவர்களிடம் பேச வேண்டும். நமது தனித்துவ அடையாளங்களே பாரதத்தை பாதுகாக்கிறது. நாம் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் ஒன்றாக வாழ்வதற்கான வழிமுறைகளை கண்டறிவோம்.
பாரதத்தில் ஜாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு இடமில்லை. நமது ஹிந்துக்களின் மதிப்புகள் மற்றும் அதன் லட்சியங்களை மறந்துவிட்டோம். அதன் காரணமாகவே பாரதம் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.
பாரதம் ஒரு ஜனநாயக நாடு. இங்கு அரசியல் கட்சிகளிடையே ஆட்சியை பிடிக்க போட்டிகள் இருக்கலாம். ஒரு கட்சி மற்றொரு கட்சியை விமர்சனம் செய்யலாம். அந்த விமர்சனம் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தக்கூடாது. அப்படி பிளவுகளை விரும்பும் சக்திகளை மக்கள் அறிந்து வைத்துள்ளனர். அரசியலுக்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்.
நமது பழங்கால பெருமைகளை புத்துயிர் பெற செய்வது அவசியம். நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் புரட்சியாளர்கள் ,சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த வரலாறு மூலம் தேசிய உணர்வு அதிகரித்துள்ளது.
பாரதத்தின் கொரோனா கால சவால்கள், அதனை கையாண்ட விதங்கள் போன்றவற்றை உலகநாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதன் எதிரொலியாக ஜி20 தலைமைப் பதவி பாரதத்திற்கு கிடைத்துள்ளது என்று கூறினார்.