அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலுக்குப் பயந்து, உடலில் குண்டுகளை கட்டி, வெடிக்கச் செய்து தற்கொலை செய்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி, 48, உடல், உரிய சட்ட நடைமுறைப்படி அகற்றப்பட்டதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அல் – குவைதா தலைவர் பின் லேடனின் உடல், கடலில் வீசப்பட்டது போல், பக்தாதியின் உடலும் கடலில் வீசப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி, நீண்ட நாள் தேடுதல் வேட்டைக்கு பின், மத்திய கிழக்கு நாடான சிரியாவில் இருப்பதை, அமெரிக்க ராணுவம், சமீபத்தில் கண்டுபிடித்தது. மோப்ப நாய்சிரியாவின் இட்லிப் நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பாக்தாதியை வேட்டையாடுவதற்காக, அமெரிக்க அதிரடிப்படையினர், மோப்ப நாய்களுடன் ஹெலிகாப்டரில் சென்றனர். அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாததால், பாக்தாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து, தற்கொலை செய்ததாகவும், பாக்தாதியின் மூன்று குழந்தைகளும் இதில் பலியாகி விட்டதாகவும், அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், இதை உறுதி செய்தார். இந்நிலையில், அெமரிக்க ராணுவ தளபதி மார்க் மில்லே, நேற்று கூறியதாவது:பலியானது பாக்தாதி தான் என்பதை உறுதி செய்யும் வகையில், மரபணுச் சோதனை நடத்துவதற்காக, உடலின் சில பாகங்கள் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. உடலின் மீதமுள்ள பெரும்பாலான பாகங்கள் சிதறி விட்டன.
அவற்றை, அமெரிக்க ராணுவத்தினர் சேகரித்தனர். அமெரிக்காவில், இதுபோன்ற தாக்குதல்களின் போது உயிரிழப்பவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதற்கென, சில நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறையின்படி, சரியான முறையில், முழுமையாக பாக்தாதியின் உடல் பாகங்களும் அகற்றப்பட்டன. கைப்பற்றப்பட்டனபாக்தாதி பதுங்கியிருந்த இடத்தில், ஐ.எஸ்., அமைப்பினர் அடுத்து எங்கு தாக்குதல் நடத்த வேண்டும் என எழுதி வைத்திருந்த சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதுபற்றிய விபரங்களை தற்போது தெரிவிக்க முடியாது. அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலின்போது பாக்தாதிக்கு உதவியாளர்களாக செயல்பட்ட இரு பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தற்கொலை செய்வதற்கு முன், பாக்தாதி, ஒரு கோழையைப் போல் கதறி அழுததாக, அதிபர் டிரம்ப் கூறியது குறித்து கேட்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவித்த தகவலைத் தான், அதிபர் செய்தியாளர்களிடம் கூறினார். இவ்வாறு அவர் கூறினார். அல் – குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், 2011ல், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். பின்லேடனின் உடலை, அமெரிக்க ராணுவத்தினர் கடலில் வீசி, அடக்கம் செய்தனர். அதேபோல், அல் பாக்தாதியின் உடலையும், அவர்கள் கடலில் வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது. பாக்தாதியின் உடல், கடலில் வீசி அடக்கம் செய்யப்பட்டதாகவும், ஆனால், வீசப்பட்ட இடம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என்றும், அமெரிக்க ராணுவத்தின் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
ராணுவ நாயின் வீரச் செயல்அமெரிக்காவின் ராணுவத் துறை செயலர் மார்க் எஸ்பெர் கூறியதாவது:அல் பாக்தாதியை வேட்டையாடுவதற்காக, அமெரிக்க படையினருடன், ராணுவ மோப்ப நாய்களும் ஹெலிகாப்டரில் சென்றன. அதில், ‘கே9’ என்ற குறியீடு உள்ள நாய் தான், இந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தது. தாக்குதலின் போது, அந்த நாய்க்கு காயம் ஏற்பட்டது. அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பெயர், புகைப்படம், வீடியோ குறித்த விஷயங்களை இப்போது வெளியிட முடியாது. இவ்வாறு, அவர் கூறினார். ஆனால், அதிபர் டிரம்ப், சமூக வலைதளத்தில், அந்த நாயின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.