பள்ளி, கல்லூரிகள் பாடத்துடன் பண்பையும் பதிய வைக்கிற மையங்கள் ஆகிட வேண்டும். இது எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ அவ்வளவு நல்லது. இந்த மூன்று செய்திகளைப் படியுங்கள்:
* சென்னை சத்தியபாமா கல்லூரியில் படித்து வந்த ராக மோனிகா என்ற மாணவி தேர்வில், காப்பியடித்ததாகக் கூறி அவரை மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியிருக்கின்றனர். அவமானத்தால் மனம் உடைந்த அந்த மாணவி விடுதியில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தவறைக் கண்டிக்கலாம். ஆனால் அவமானப்படுத்தக் கூடாது.
* அரக்கோணம் அருகே பனப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த 16 வயது ஆன நான்கு மாணவிகளை ஆசிரியர்கள் திட்டியதால் நால்வரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்கும்போது கூட மிகுந்த ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும்.
* திருவள்ளூரில் ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பயன்படுத்துகிற 10 கழிவறைகளை மாணவிகளைக் கொண்டு சுத்தம் செய்யச் சொல்லியுள்ளனர். ஐயோ பாவம், அந்த குழந்தைகள் வெறும் கைகளைக் கொண்டே கழிவறைகளை சுத்தம் செய்துள்ளனர். அறிவை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களுக்கே அறிவு கெட்டுப் போய் விட்டதா?
பெற்றோர்களுக்கும் மிகுந்த பொறுப்பு உள்ளது. நாள் முழுவதும் டி.வி. முன்னால் உட்கார்ந்து சீரியல்கள் பார்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். தங்களது குழந்தைகளிடம் மனம்விட்டு பேசி, அவர்களுக்கு கஷ்டங்களை தாங்கக் கூடிய மன உறுதியைக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும் தங்களது தரத்தை, தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளி, கல்லூரியோ, தனியார் பள்ளி, கல்லூரியோ, ஆசிரியர், மாணவர், பெற்றோர், நிர்வாகத்தினர் என முழு கல்விக் குடும்பமும் வாரந்தவறாமல் சந்தித்து நெருடல்களை நீக்கவேண்டும். பரஸ்பர பரிவும் மரியாதையும் வளர்க்கவேண்டும்.
பிரச்சினை கடினமாகி வருவதால் தீர்வும் கடினமாகத்தான் இருக்கும்.