முஸ்லிம் லீக் – தனது கட்சியின் பெயரிலேயே ‘முஸ்லிம்’ என்று மதத்தின் பெயரை வைத்துள்ள கட்சி. ஹிந்துஸ்தானத்தை துண்டாடி பிரிவினைக்கு வித்திட்ட ஜின்னா ஊட்டி வளர்த்த கட்சி. முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் கட்சி. ஜாதி, மதம் கூடாது என்று முழங்கி வருகின்ற திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் இடம் பெற்று ஐந்து இடங்களைப் பெற்றுள்ளது.
அடுத்து மனித நேய மக்கள் கட்சி. பெயரில்தான் மனித நேயம் தவிர இதுவும் முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள ஒரு மதவாத கட்சிதான். அல் உம்மா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என செயல்பட்டு வந்த அமைப்புதான் மனித நேய மக்கள் கட்சி என புது அவதாரம் எடுத்துள்ளது. கடந்த தேர்தலில் ஜெயலலிதா கூட்டணியில் இடம் பெற்று இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்ற காரணத்திற்காக பதவியேற்பு விழாவைப் புறக்கணித்துவிட்டு, ஐந்து ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து ஐந்து இடங்களைப் பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் மூன்றாவதாக எஸ்.டி.பி.ஐ. எனும் ஒரு முஸ்லிம் கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த தலையங்கம் எழுதும் வரை அதற்கு எத்தனை இடம் என்று முடிவாகவில்லை.
மனித நேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற தமிமும் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சி துவக்கியுள்ளார். இவர் அதிமுகவில் சேர்ந்து இரண்டு இடங்களைப் பெற வாய்ப்பு இருக்கிறது.
ஜெயலலிதா கூட்டணியில் ஷேக் தாவூது தலைமையில் தவ்ஹித் ஜமாத் எனும் முஸ்லிம் அமைப்பு இடம் பெற்றுள்ளது. அவர்களுக்கும் இரண்டு இடங்கள் கிடைக்கலாம்.
இப்படியாக முஸ்லிம் அமைப்புகள் வெவ்வேறு பெயர்களில் பல கூட்டணிகளில் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் யார் வெற்றி பெற்றாலும் இவர்களும் சில தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவார்கள்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என எல்லா கட்சிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம் பெறுகிறார்கள். அப்படியிருக்கும்போது முஸ்லிம்களுக்கென உள்ள தனி அமைப்புகளை அரசியலில் வளர்த்து வருவது நல்லதல்ல.
அரசியல்வாதிகளின் அகராதியில் ‘ஹிந்து’ என்றால் வகுப்புவாதம். ‘முஸ்லிம்’ என்றால் தேசியவாதம்! தட்டிக்கேட்கப்பட்டாக வேண்டிய விபரீதம் இது.