‘பவஹாரி பாபா’ என்னும் ஒரு மகான் இருந்தார். சமைப்பதற்கு அவர் ஒரே பாத்திரம் மட்டும் வைத்திருந்தார். ஒருநாள் அதை ஒரு திருடன் திருடிக்கொண்டு போகிற வேளையில் பாபா அதைப் பார்த்துவிட்டார். அவன் உடனே அந்தப் பாத்திரத்தை கீழே வைத்துவிட்டு ஓட்டம் பிடித்தான். பாபா அந்தப் பாத்திரத்தைக் கையில் தூக்கிக்கொண்டு அவன் பின்னால் ஓடினார். பாத்திரமும் கையுமாகப் பிடிக்க தன்னைத் துரத்திக்கொண்டு வருகிறார் என்று எண்ணி மிக வேகமாகத் திருடன் ஓடினான். ஆனால் பாபா மிக வேகமாக ஓடி அவனைப் பிடித்துவிட்டார். அவனோ பயந்து நடுங்கினான். அப்போது பாபா, அன்பா, எப்போது இந்தப் பாத்திரத்தில் நீ பற்று வைத்தாயோ, அப்போதே இந்தப் பாத்திரம் உனக்குரியது ஆயிற்று. தயவுசெய்து இதை எடுத்துக்கொண்டு போ” என்று தெரிவித்தார். பவஹாரி பாபாவின் தூய மனப்பான்மையும் உள்ளன்பும் அந்தத் திருடனுடைய மனதை அக்கணமே மாற்றிவிட்டது. ஐயா, இனி நான் இந்த இழிதொழிலை ஒருநாளும் செய்யமாட்டேன்… இது சத்தியம்” என்று கூறி மனம் மாறினான்.
ஒரு துறவியின் மனநிலை எப்படியிருந்தது? இருந்த ஒரே பாத்திரம் போனாலும் கூட பரவாயில்லையே என்று நினைத்தாரே.. இதுவல்லவோ உண்மையான துறவு? கெட்டவனை நல்லவனாக ஆக்குவதற்கு இது ஒரு அன்பு முறை. இதற்கு ‘மூர்க்க தேவோ பவ’ என்று பெயர்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்