ஊடகமே, நீ உதவாக்கரை ஆகலாமா?

ழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பாரத அரசின் அறிவிப்பை துணிச்சலான நடவடிக்கை” என்கிறது ‘த நியூயார்க் டைம்ஸ்’. முழு பலன் தெரிய சிறிது காலம் பிடிக்கும்” என்கிறது ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’. சிங்கப்பூர் அதிபர் லீ குவான் யீ யுடன் மோடிஒப்பிடப்படுவதை சுட்டிக்காட்டியது ‘இண்டிபெண்டன்ட்’ பத்திரிகை.தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை மோடி நிறைவேற்றுகிறார்” என்றது ‘சிட்னி மார்னிங் ஹெரால்டு’. கருப்பு பணத்தின் மீதான யுத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பவர் மோடி என்கிறது ‘வாஷிங்டன் போஸ்ட்’ இந்த நடவடிக்கைக்காக பாரதப் பிரதமருக்கு ஜே போடாத குறையாக பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

வெளிநாட்டு பத்திரிகைகள் எல்லாம் பிரதமரின் இந்த அதிரடி பொருளாதார நடவடிக்கையை மனம் திறந்து பாராட்டுகையில் தமிழகத்தில் மையம் கொண்டுள்ள காட்சி ஊடகங்களையும் சில நாளிதழ்களையும் பார்த்தால் தற்போதைய மத்திய இணை அமைச்சரும் முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே. அக்பர், 10 ஆண்டுகளுக்கு முன் சொன்ன ஒரு விஷயம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. வியாபாரிக்கும் அரசியல்வாதிக்கும் எடுபிடியாக பத்திரிகைகள் நடந்துகொள்வது மீடியா செய்யும் ஏழு பாவங்களில் ஒன்று என்றார் அவர். 7 பாவங்களையும் பட்டியலிட்ட அவர், கடைசி பாவமாக குறிப்பிட்டது ஊடகங்களின் அறியாமை. தமிழக ஊடகங்கள் குறிப்பாக சேனல்கள் இந்த இரண்டு பாவங்களையும் பொழுது விடிந்து பொழுது போனால் செய்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

அழிக்கப்படும் சாக்குமூட்டைகள், உள்ளாட்சிகள் உள்பட அரசுக்கு வந்து குவியும் கோடானுகோடி வரிப்பணம் – இதையெல்லாம் நம் ஊர் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டு வங்கி வாசலில் காத்திருக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஏதோ பஞ்சத்தில் அடிப்பட்ட நபர் என்பது போல பேட்டி பேட்டியாக ஒளிபரப்பித் தீர்க்கின்றன.

அரசு நடவடிக்கை ஒவ்வொன்றையும் ஆதரித்து எழுது என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் இப்போது செயல்படுத்தப்படுகிற அதிரடி நடவடிக்கை வெறும் அரசு நடவடிக்கை அல்ல. பயங்கரவாதத்தை வளர்க்கும் பணத்திலிருந்தும் ஊழலை கொழுக்கச் செய்யும் பணத்திலிருந்தும் தேசத்தையே கைதூக்கிவிடும் அரும்பணி அல்லவா நடக்கிறது? இதை ஆதரிப்பதை அல்லவா எந்த ஒரு சாதாரண வாசகரும் டிவி பார்ப்பவரும் விரும்புவார்?