பத்திரிகை பலம் : ஒரு புதிய பார்வை

தமிழகத்திலிருந்து ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ என்ற பெயரில் ஒரு செய்தி நாடு முழுவதும் சென்றது. அனைத்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக போராட வேண்டும், அவர்களை இந்த நாட்டில் இருந்து ஓட்ட வேண்டும் என்பது தான் அந்த பிரகடனம். திருச்சி மலைக்கோட்டை கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வாசல், காளையார் கோயில் ஆகிய இடங்களில் இருந்து 1801 ஜூன் 16 அன்று, இந்த அறைகூவல் எழுந்தது; செய்தி எழுதி சுவர்களில் ஒட்டப்பட்டு, மக்கள் மத்தியில் பரவி, நாடு முழுவதும் சென்றடைந்தது. இது சுதந்திரப் போராட்டத்தில் மருது சகோதரர்களின் வியூகம்.


1857ல் நடந்த ‘முதல்’ சுதந்திர போராட்டத்தின் போது, நாடு முழுவதும் செய்தி பரவிய உத்தி அலாதி: மக்கள் சப்பாத்தி, சப்ஜி தயார் பண்ணி எடுத்துக்கொண்டு அடுத்த ஊருக்கு போய் அங்கே உள்ள மக்களை அழைத்து உட்கார வைத்து அனைவருக்கும் பரிமாறி பசியாறுவார்கள்; உடனே அந்த ஊர் மக்களும் சமைக்கத் தொடங்குவார்கள்; சாப்பிடும் நேரம், சமைக்கும் நேரம் இரண்டின் போதும் சுதந்திரப் போராட்ட செய்தி மக்களுக்கு தெரிவிக்கப்படும். அங்கே தயாராகும் சப்பாத்தி பொட்டலம் கட்டப்படும்; அதை எடுத்துக்கொண்டு அடுத்த ஊருக்கு செல்வார்கள். “1857 மே 10 அன்று போராட்டம் வெடிக்கும்” என்ற செய்தி, இவ்வாறு பொதுமக்கள் அனைவர் மத்தியிலும் பிரிட்டிஷ் பட்டாளத்தில் உள்ள பாரதியர்கள் மத்தியிலும் பரப்பப்பட்டது. துறவிகளோ தாம்பாளத்தில் தாமரை பூ வைத்து ஊர் ஊராக எடுத்துச் செல்வார்கள்; மக்களை உட்கார வைத்து `சத் சங்கம்’ நடத்துவார்கள்; கடைசியில் “ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட மே 10ம் தேதி டெல்லி சலோ” என்ற தகவலை ஒவ்வொருவரும் உறுதிமொழியாக ஏற்கச் செய்து அடுத்த ஊர் செல்வார்கள். நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் பற்றிய செய்தி பரப்பப்பட்ட விதம் இது.

பூனாவில் சாபேக்கர் சகோதரர்கள் என்ற மூன்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1898 −- 99ல் தூக்கிலிடப்பட்டார்கள். செய்தி எந்த பத்திரிகையிலும் வெளியாகவில்லை. ஆனால் பால கங்காதர திலகர் தொடங்கி நடத்தி வந்த’ கேசரி’ பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டதும், நாடு முழுவதும் செய்தி பரவியது. சுதந்திர ஆவேசம் காட்டுத் தீயாக பரவியது. கேசரியில் செய்தியைப் படித்த சாவர்க்கர் நானும் இந்த தேசத்திற்காக போராடுவேன் என்ற உறுதி ஏற்று வீரசாவர்க்கர் ஆனார்.

சென்னை திருவல்லிக்கேணியில் வசித்த அளசிங்க பெருமாள் 1895இல் ‘பிரம்மவாதின்’ என்ற பத்திரிகையை தொடங்கினார். ஹிந்து தர்மத்தின் கருத்துக்களை, சுவாமி விவேகானந்தரின் கட்டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றை `பிரம்மவாதின்’ நாடு முழுவதும் கொண்டு; செல்ல கருவியாக அமைந்தது. அது மட்டுமல்ல, இலங்கையை சேர்ந்த பௌத்த சமய பெரியவர் தர்மபாலர், மேக்ஸ் மில்லர், சகோதரி நிவேதிதை, பால கங்காதர திலகர் போன்ற பெரியோர்கள் அதில் கருத்து வெளியிட்டு வந்தார்கள். நாடு முழுவதும் அந்தக் கருத்துக்களை கொண்டு சென்று விழிப்புணர்வு ஊட்டுவதற்கு, அந்த சென்னை பத்திரிகை ‘பிரம்மவாதின்’ அரிய பணி புரிந்தது.
பாரதியார் தனது ‘இந்தியா’ பத்திரிகை மூலம் நாட்டில் சுதந்திர ஆவேசத்தை எழுப்பி வந்தார். ஆங்கிலேய அரசு அதை தடை செய்ததால், புதுச்சேரியில் இருந்து இந்தியா வெளிவரத் தொடங்கியது. இது தவிர அளசிங்கர் உதவியுடன் சக்கரவர்த்தினி, பாலபாரதி, விஜயா போன்ற பத்திரிகைகளையும் ஆசிரியராக இருந்து நடத்திய பாரதியார், சுதந்திர எழுச்சி கொழுந்துவிட்டு எரியச் செய்தார். இவை எல்லாமே சென்னையில் தொடங்கிய பத்திரிகைகள்.

வ.உ.சிதம்பரனாரின் தீர்க்கமான யோசனையால், ஆங்கிலேய கடல் வணிக ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் இலங்கைக்கு தூத்துக்குடியில் இருந்து கப்பலோட்டும் முயற்சி தொடங்கியது. `சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ 1906ல் நிறுவப்பட்டது. அதற்காக பொதுமக்கள் பங்கு முதலீடாக 10 லட்சம் ரூபாய் வரை திரட்டி கொடுத்தவை இந்தியா, சக்கரவர்த்தினி பத்திரிகைகளே.

பின்னாளில் காந்திஜி ஹரிஜினல் சமுதாய மக்களின் பிரச்சனைகளை நாடு நெடுக அறிய செய்ய `ஹரிஜன்’ பத்திரிகைத் தொடங்கினார். இளைஞர்களுக்கு தேசபக்தியூட்டும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்தியா பத்திரிகையும் தொடங்கினார். 1947 செப்டம்பர் 28ல் காந்திஜி டெல்லியில் சங்க நிகழ்ச்சியில் பேசுகையில், 1934ல் வார்தாவில்
ஆர்.எஸ்.எஸ் முகாமை பார்வையிட தான் சென்ற சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அங்கு ஏற்றத்தாழ்வு அறவே இல்லாத சமுதாயம் உருவாகியிருப்பதை தான் கண்கூடாக பார்த்ததை விவரித்தார். இந்த வரலாறு ஹரிஜன் பத்திரிகை செய்தியாக வெளியாகி நாம் அறிந்து கொள்ள உதவியது.

இவ்வாறு பாரத மக்களை சுதந்திரப் போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தியதும் பத்திரிகைகளை சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களுக்கு எழுச்சி அளித்ததும் பத்திரிகைகளே. சுதந்திரம் அடைந்த பிறகு மக்கள் மத்தியில் தேசிய உணர்வு பரவச் செய்வதற்காக, தேசிய உள்ளம் கொண்டவர்கள் தமிழில் விஜயபாரதம் / மலையாளத்தில் கேசரி / தெலுங்கில் ஜாக்ரதி / கன்னடத்தில் விக்ரமா / ஆங்கிலத்தில் ஆர்கனைசர் / ஹிந்தியில் பாஞ்சஜன்ய … என்று நாடு நெடுக ஆங்காங்குள்ள மொழிகளில் பத்திரிகைகள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். எதிர்மறையான தகவல்களே செய்திகளாக பரவி வருகின்ற இன்றைய சூழ்நிலையில், விஜயபாரதம் போன்ற கலாச்சார / தேசிய பத்திரிகைகள் மக்களிடையே இந்த தேசத்தின் உணர்வையும், தர்மத்தையும் கொண்டு செல்லும் பணிபுரிந்து வருகின்றன. மக்களை நம் பக்கம் ஈர்ப்பதற்கு மட்டுமல்லாமல் தர்மத்தின் பக்கம் அவர்கள் வாழ வகை செய்வதற்கும் தேசிய பத்திரிகைகள் பாடுபட்டு வருகின்றன.

(சென்னை புரசைவாக்கம் ஏபிவிபி டி.எஸ்.ரெட்டி அரங்கில் ‘விஜயபாரதம்’ 2025 தீபாவளி மலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் வட தமிழக ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளரான கட்டுரையாளர் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து).