பதான் படத்துக்கு எதிர்ப்பு

ஷாருக்கான் நடித்த சர்ச்சைக்குரிய ‘பதான்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வி.ஹெச்.பி. தொண்டர்கள், பதான் படம் வெளியான திரையரங்குகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்தின் போஸ்டர்களையும் தீவைத்து எரித்து தங்களது எதிர்ப்பை வெளிபடுத்தினர். இதேபோல, நாடு முழுவதும் பதான் திரைப்படம் வெளியிடப்பட்ட பல்வேறு திரையரங்குகளின் முன்பாக வி.ஹெச்.பி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதில், அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர், “பதான் படத்தில் செய்த மாற்றங்களால் அமைப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதனால், போராட்டம் நடத்தும் முடிவை வாபஸ் பெற முடிவாகி உள்ளது” என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில், பேஷரம் ரங் பாடல் காட்சிகளில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில் மோசமாக நடித்திருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு தேசமெங்கும் வெடித்தது. மேலும், பாடல் வரிகளும் சர்ச்சையை கிளப்பின. இப்பாடலுக்கு தடை கோரி வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டது. அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா, ‘காவி நிறம் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. நடிகர் ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிருடன் கொளுத்தி விடுவேன். காவி நிற அவமதிப்பு செய்த பதான் படம் திரையிடும் திரையரங்குகளை எரிப்போம்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த பதான் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்து, நடிகர் ஷாருக்கான் மற்றும் பிற நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், போஸ்டர்களை கிழித்து வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படம் திரையிடப்பட்டால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்று ஏச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.