கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வானார். ஆனால் இந்த வெற்றியை டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். ஜோ பைடன் தேர்தலில் முறைகேடு செய்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் கண்டன பேரணிகளையும் நடத்தினர். ஜோ பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் அளிக்கும் பணி தொடங்கியது. இதை தடுக்க, டிரம்ப் ஆதரவாளர்கள் கேபிட்டல் கட்டடத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறை, காவலர்கள் துப்பாக்கி சூடு போன்ற காரணங்களால் நான்கு பேர் இறந்துள்ளனர். பல காவலர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் ‘ரிபப்ளிக் நேஷனல் கமிட்டி’ அலுவலகத்தில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க, டிரம்பின் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ‘சட்டப்படி அமைதியாக அதிகார மாற்றம் நடக்க வேண்டும்’ என பாரத பிரதமர் மோடி தன் டிவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.