பட்டியல் சமூகங்கள் பெருமிதம் கொள்கிற விதத்தில் சொல்லவேண்டிய சொல்?

 

 

இன்று அரசியல், ஆன்மிக தளங்களில் பட்டியல் சமுதாயத்தினரை குறிப்பதற்கு தலித் என்ற பொதுவான ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஏன்? பட்டியல் சமுதாய தலைவர்களே தலித் என்கிற வார்த்தையைத் தான் நடைமுறையில் பயன்படுத்துகிறார்கள். இது முற்றிலும் தவறானது. தலித் என்ற வார்த்தையானது கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு பட்டியல் சமூகம் என்றுதான் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் குறிப்பிடப்பட்டது. அதற்கு முன்பு அந்தந்த சமூகத்தின் பெயராலேயே அழைத்தார்கள். தலித் என்கின்ற வார்த்தையும் சாதிய இழிவை குறிக்கிற வார்த்தையாகத்தான் இன்றைக்கு மாறியிருக்கிறது. இதைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பட்டியல் சமூகத்தினரை அந்தந்த ஜாதியின் பெயரால் அழைப்பது கூட ஒரு வகையில் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். காரணம் அந்தந்த ஜாதியினுடைய வரலாறு அதில் பொதிந்து கிடக்கிறது. உதாரணத்திற்கு வள்ளுவர் என்ற ஜாதி ஒரு ஆளுமையை குறிக்கிறது. உலகத்திற்கு முதன்முதலாக பிரபஞ்ச விதியைச் சொன்ன சமுதாயம் அது.

சாம்பவர் என்ற சமூகப்பெயர், அவர்கள் ஈசன் வழிவந்தவர்கள் என்ற அடையாளத்தை குறிக்கிறது. தேவேந்திரர் என்கிற அவர்கள் இந்திரன் வழிவந்தவர்கள் என்ற அடையாளத்தைக் குறிக்கிறது. அருந்ததியர்களும் அதைப் போன்றே. இவை எல்லாம் இழிவாக கையாளப்பட்டதன் விளைவாகத்தான் ஆளுமை பொருந்திய இந்த வரலாற்றுப் போற்றுதலுக்குறிய பின்னணி தெரியாமலே உள்ளது. அந்தந்த ஜாதியின் பெயரால் பட்டியல் சமூகத்தை அழைப்பது சீரிய வரலாற்று பின்னணியை நினைவுகூர்வதாக அமையும். அந்த சமூகத்தினுடைய ஒட்டுமொத்த திரட்சிக்கு இது வழிவகுக்கும். உதாரணத்திற்கு வட மாநிலங்களில் வள்ளுவர் சமூகம் அப்படித்தான் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. எனவே பட்டியல் சமுதாயத்தை இனி தலித் என்று அழைப்பது கூடாது. அந்தப் போக்கை அரசியல்வாதிகளும், ஆன்மிக வாதிகளும் கைவிடவேண்டும்  என கேட்டுக்கொள்கிறோம். அந்தந்த ஜாதியின் பெயரால் அழைப்பது கீழ்மைப்படுத்துகிற தன்மையில் இருந்த காலம் தற்பொழுது மாறியிருக்கிறது. எதுவுமே அந்த சொல்லைக் கையாள்கிற விதத்தைப் பொறுத்திருக்கிறது.

ஆதியில் இருந்த வால்மீகி, வள்ளுவர், சாம்பவர், தேவேந்திரர், அருந்ததியர் என்கின்ற வார்த்தையை பயன்படுத்துவதனால் எந்த தவறும் இல்லை. அதனால் எந்த இழிவான நிலையும் ஏற்படாது. எனவே பட்டியல் சமூகத்தினர் தமது சொந்த ஜாதியின் அடையாளத்தை வழியுறுத் துவது மூலம் ஹிந்து சமுதாய ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் என்று கருதுகிறேன். தலித் என்ற வார்த்தை கிறிஸ்தவத்துக்கு துணைபோவதாகதான் அமைகிறது.