படுகர் மக்களின் கலாசார உடையில் ஆஸ்திரேலிய குழு

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கு ஆஸ்திரேலியா மாகாண சட்டசபை குழுவினர், படுகர் இன மக்களின்  கலாசார உடையணிந்து, நடனமாடி மகிழ்ந்தனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கன்னேரிமுக்கு திம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் – சரஸ்வதி தம்பதியின் ஒரே மகன் ஜெகதீஸ் கிருஷ்ணன், 50; குன்னுாரில் பிளஸ் 2 வரை படித்த இவர், 2006ல் ஆஸ்திரேலியா சென்றார்.’பெர்த்’ நகரில் ‘பாலிகிளினிக்’ நடத்திய இவர், 2021 தேர்தலில், மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் ரிவல்டன் தொகுதி எம்.எல்.ஏ., ஆனார்.இவரது ஏற்பாடில், மைக்கேல் ராபர்ட்ஸ் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் மூவர் நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.நேற்று முன்தினம், கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில் நடந்த கலாசார கலை விழாவில் இக்குழுவினர் பங்கேற்றனர்.

அவர்களிடம், ஊர் பெரியவர் பெள்ளா கவுடர், படுகர் மக்களின் கலாசாரம், பண்பாடு குறித்து விளக்கினார். ஆஸ்திரேலியா குழுவினர் படுகர் கலாசார உடையுடன் நடனமாடி மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் மைக்கேல் ராபர்ட்ஸ் பேசுகையில்  ‘’மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையே உறவு மேம்பட கல்வி, திறன் மேம்பாடு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் அறிக்கை ஆஸ்திரேலியா சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும்,’’ என்றார்.