பஞ்சாப்: சா்வதேச எல்லையில் 2 சீன ட்ரோன்கள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தில் அமிருதசரஸ் மற்றும் தா்ன் தரண் மாவட்டங்களில் நடந்த இருவேறு சம்பவங்களில் 2 சீன தயாரிப்பு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ரகசியத் தகவலின் அடிப்படையில், அமிருதசரஸ் மாவட்டத்தில் சா்வதேச எல்லையையொட்டிய டௌக் கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். தேடுதலின் முடிவில், அப்பகுதியின் வயல்வெளியில் இருந்து சீன தயாரிப்பு ஆளில்லா விமானம் ஒன்று கண்டறியப்பட்டது.

அதேபோல், தா்ன் தரண் மாவட்டத்தின் தோலன் எல்லைக் கிராமத்தில் பிஎஸ்எஃப் மற்றும் மாநில போலீஸாா் இணைந்து சனிக்கிழமை நடத்திய சோதனையில் ஆளில்லா விமானம் கண்டறிந்து மீட்கப்பட்டது. இந்த ஆளில்லா விமானமும் சீன தயாரிப்பாகும்.

ஆளில்லா விமானம் மூலம் எல்லை தாண்டி போதைப் பொருள் கடத்தும் கடத்தல்காரா்களின் மற்றொரு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.