ஜே.சி.குமரப்பா, லண்டனில் தணிக்கையாளராகத் தகுதி பெற்ற பின், அமெரிக்காவின் கொலம்பியப் பல்கலைக்கழகத்தில், பாரதத்தின்பொதுநிதி குறித்து ஆய்வு செய்தார். பாரதத்தில், வறுமையைத் தூண்டும் முக்கியக் காரணி அரசின்கொள்கைகளே என்றுகண்டறிந்தார். காந்தியால் ‘யங் இந்தியா’ இதழின் பொறுப்பாசிரியரானார். அவரின் புரட்சிகர எழுத்துக்களுக்காக ஆங்கிலேய அரசால் மூன்று முறை சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.
வேளாண்மையும் நமது உடல்நலமும் இன்றைக்குக் கண்டுள்ள சீரழிவை குறித்து அன்றைக்கே எச்சரித்த தீர்க்கதரிசி குமரப்பா. காமராஜர் ஒருமுறை குமரப்பாவைச் சந்தித்தபோது, அவரிடம், கிராமப்புறங்களில் மின்சார மோட்டார்களையும் கிணற்றுப் பாசனத்தையும் விரிவுபடுத்துவதைவிட ஏரிகளையும் குளங்களையும் அரசு விரிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கிராம வேளாண்மையில் புஞ்சைப் பயிர்களான சிறு தானியங்கள், தீவனங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புகள் போன்றவை உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்துக்கானவை. தீட்டிய அரிசியின் நுகர்வு மக்களின் உடல்நலத்துக்கும், பொருளாதார நலனுக்கும், கிராமியப் பொருளாதார நலனுக்கும் கேடாக முடியும் என்றார் குமரப்பா. தீட்டிய அரிசியைக் காட்டிலும், சிறு தானியங்களும் தீட்டாத அரிசியும் மக்களின் நலனுக்கு ஏற்றவை என்றார்.
தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள் தொடங்கப்பட்டபோது, குமரப்பா அவற்றை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். சர்க்கரை ஆலைகளுக்குப் பதிலாக, பனைமரங்கள் தரும் பதநீரையும், கருப்பட்டியையும் மேம்படுத்த அரசு முதலீடு செய்ய வேண்டும் என்றார். இப்படி அவர் முன்வைத்த கருத்துகளால் ‘பசுமைப் பொருளாதாரச் சிந்தனையின் சிற்பி’ என்று போற்றப்படுகிறார்.
காந்தியின் மறைவுக்குப் பின் சேவா கிராம ஆசிரமத்தில், இயற்கை வேளாண்மை மேம்பாட்டுக்காக பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டார் குமரப்பா. மதுரை காந்தி நிகேதன் ஆசிரமத்தின் பணிகளால் கவரப்பட்ட குமரப்பா தனது ஓய்வுக்காலத்தை அங்கு செலவிட்டார்.