பங்கமிலா அங்கம் தங்கமே, தங்கம்!

லகில் உள்ள மொத்த தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில், 60 சதவீத நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். உலகில் உள்ள 10 ஆயிரம் மக்களில் ஒருவருக்கு இந்த நோய் உருவாகிறது.

நம் நாட்டில், ‘சுஸ்ருத ஸம்ஹிதா’ என்ற சம்ஸ்கிருத நூல் இந்த நோய் பற்றி கூறுகிறது. இதற்கு வைத்தியமாக ‘ஷால் மூக்ரா’ தைலத் கூறப்படுகிறது. பண்டைய நூல்களில் இந்த வியாதிக்கு ‘குஷ்ட்’ என்ற பெயர் இருந்ததாகத் தெரிகிறது. இன்றும், அதே பெயரிட்டு சொல்கின்றனர்.

மனித உடலில் புரதச்சத்து குறைவு காரணமாக ‘மைக்ரோ பாக்டீரியம் லெப்ரே’ என்ற கிருமி மனிதர்களை மட்டும் தாக்குகிறது. அது மெல்ல மெல்ல வளர்ந்து 6, 7 வருடங்களில் நமது உடம்பில் உள்ள தொடு உணர்ச்சிக்கான நரம்புகள் பாதிக்கப்பட்டு, உணர்வு குறைவு காரணமாக புண்கள் தோன்றி, அதுவே உருச்சிதைவிற்கு காரணமாகிறது.

தொழுநோயின் ஆரம்ப அறிகுறியாக தோலின் மேல்புறத்தில் தேமல் போன்று சிறு தழும்பாக துவங்குகின்ற இந்த நோய், நாளடைவில் பெரிதாகப் படர்ந்து உடலில் ஆழமாக பரவுகிறது. துவக்கத்தில் உணர்ச்சியின்றி காணப்படும் இந்தப் பகுதிகளில் பால்பாயிண்ட் பேனா முனையைக் கொண்டு குத்திப் பார்க்கையில், உணர்ச்சியற்று இருந்தால் உடனடியாக தொழுநோய்க்கான மருத்துவரை தொடர்புகொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஆரம்ப நிலையிலேயே இதனை முற்றிலுமாக சரிசெய்து கொள்ளலாம்.

page_17_pic_1

நோய் சற்று முற்றிய நிலையில், உடல் ஆரஞ்சு பழத்தோல் போன்று பளபளப்பாகவும் காதுமடல்கள் தடித்தும் உடல் எண்ணெய் பூசினாற்போன்று காணப்படும். இவர்களுக்கு கண்டிப்பாக கூட்டுமருந்து சிகிச்சை தேவை. நோயின் தன்மைக்கேற்ப ஆறு மாதம் முதல் ஓராண்டு காலம் வரை சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டும். முதல் டோஸ் எடுத்துக்கொண்ட உடனேயே கிருமிகள் செத்துவிடும். ஆனால் தொடர்ச்சியான அதன் பாதிப்பு நீங்கி நலம் அடைய நோயின் தன்மைக்கேற்ப சில காலங்கள் கூட்டுமருந்து உட்கொள்ள வேண்டும். உட்கொள்ள மருந்து எடுத்துக்கொண்டவர்கள் தொழுநோயாளிகள் அல்ல. அவர்கள் அதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். மாறாக, நோயை கண்டறியாமல் பெரிய அளவு பாதிக்கப்பட்டு, கை கால்கள் முடமாக்கப்பட்ட நிலையில், ஆறாத புண்களோடு இருப்பவர்கள் தொழுநோயாளிகளாகக் கருதப்படுகிறார்கள்.

 

இதனை முன்னரே கண்டுபிடித்து தடுப்பதற்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு இருவேறு காரணங்கள் இருப்பதாக அறிய முடிகிறது. ஒன்று இந்த நோய் வெப்ப மண்டல பிரதேசங்களில் மட்டுமே உள்ளது. குறிப்பாக, இந்தியா, இந்தோனேஷியா, பிரேசில், ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது. மேலும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த எந்த ஒரு பகுதியிலும் இந்த நோயின் தாக்கம் இல்லை. இரண்டாவது, ஒருசில மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை தவிர, பிற நிறுவனங்கள் இந்த ஆய்வில் ஈடுபடவில்லை. காரணம், பல கோடி ரூபாய் செலவழித்து கண்டுபிடிக்கப்படும் மருந்திற்கு மிகப்பெரிய வருவாயைத் தரக்கூடிய நோயாளிகள் இல்லை என்பதும் ஒரு காரணம்.

இந்த நோய் மனிதனை மட்டுமே தாக்கும் நோய். விலங்குகளை இது பாதிப்பதில்லை. செயற்கையாக வளர்த்து ஆய்வு செய்ய இயலவில்லை. அதனால் தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

இந்தியாவில் தொழுநோய் ஒழிக்கப்பட்டதாக 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்தார். இது முழுக்க முழுக்க மோசடியான ஒரு அறிவிப்பு. தடுக்க மருந்தின்றி, நோய் வந்தால் குணப்படுத்த மட்டுமே முடியும் என்ற நிலையில், தொழுநோயை ஒருபோதும் முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்று தெரிந்திருந்தும், உலக நாடுகளை திருப்திப்படுத்தவே இந்த அறிவிப்பை அன்றைய அரசு

 

வெளியிட்டது.

1898ல் கொண்டுவரப்பட்ட ‘இந்தியன் லெப்பர் ஆக்ட்’ மூலமாக இவர்களுக்கு பல்வேறு விதமான கொடுமைகள் அரசின் நிர்வாகத்தின் மூலமாகவே செய்யப்படுகிறது.

இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டத்தில் ஒரு அங்கமாக தொழுநோய் ஒழிப்பு இருந்தது. 1975ம் ஆண்டில் துவங்கப்பட்ட 20 அம்சத் திட்டத்திற்கு, 1995ம் ஆண்டுக்குள் தொழுநோயை முறியடித்ததாகச் சொல்லி, இத்திட்டத்திற்கு மூடுவிழா நடத்த முடிவெடுத்தார்கள். அப்போதிருந்த எதிர்ப்பின் காரணமாக, தேசிய தொழுநோய் தடுப்பு திட்டத்தை, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். 2005ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, குறிப்பிட்ட சராசரியில் ஒரு சதவீத அளவிற்கும் குறைவான நபர்களே தொழுநோயாளிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதால், இத்தகைய ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக

 

சொல்லப்பட்டது.

ஆனால் 1981ல் உண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு மாதிரிகள் நடவடிக்கையே கேலிக்கூத்தானது. ஏனென்றால், முன்பு 20,000 நபர்களுக்கு ஒரு தொழுநோய் ஆய்வாளர், வீடுவீடாகச் சென்று, ஒவ்வொரு நபரையும் நேரடியாகச் சந்தித்து, ஆய்வு செய்து, அவர் கொடுக்கின்ற இன்டன்ஸிவ் சர்வே அறிக்கையின் அடிப்படையில் தொழுநோயானது புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது.

 

2005ல் தானாக முன்வந்து மருத்துவமனைக்கு வந்து நோயாளிகள் தெரிவிக்கின்ற விவர அடிப்படையில் இந்த தேசிய சராசரி எடுக்கப்பட்டுள்ளது. இருவேறு விதத்தில் ஆய்வு செய்து அறிக்கைகளை ஒப்பிடுவது அறிவுப்பூர்வமானது இல்லை. இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளுகின்ற ஒரு அறிக்கை.

இந்த அறிவிப்பின் காரணமாக, பிற வளர்ந்த நாடுகளிலிருந்து இதற்கென அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு உதவி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதனை பெற்று இங்கு சேவை என்ற பெயரில் செய்து வந்த மிஷனரிகளும் நிதி ஆதாரம் இன்றி தங்களது திட்டங்களை அந்தந்த பகுதியில் உள்ள அரசு அமைப்புகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாடு திரும்பிவிட்டனர்.

அரசும் தனது பங்கிற்கு மாவட்ட சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழுநோயாளிகளுக்கான தனித் துறை – பதிவேடுகளில் பதியாமல் விட்டுவிட்டு, நோயாளிகளே வரவில்லை என்று பொய்யான காரணம் காட்டி, மூடுவிழா நடத்திவிட்டது. இப்படி தொழுநோயாளிகள் அரசு, சமூகம், மருத்துவர்கள், சேவை அமைப்புகள்

 

அனைவராலும் வஞ்சிக்கப்பட்டனர்.

சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இதற்கென ‘டிப்ளமோ இன் லெப்ரசி’ என்ற ஒரு பட்டயப்படிப்பு இருந்து வந்தது. அதைப் படிப்பதற்கு அரசும் டாக்டர்களும் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பதால் அந்த பிரிவு இழுத்து மூடப்பட்டு அந்த பட்டயப்படிப்பும் நீக்கப்பட்டது.

கொடிய நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய எய்ட்ஸ், டிபி போன்ற நோயாளிகள் கூட வெளியில் தெரியாமல் மனிதர்களோடு மனிதர்களாக பழகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தொற்றுநோயே இல்லாத தொழுநோய் மாற்றுத் திறனாளிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

உடல் ஊனமுற்றோருக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை கண் தெரியாதவர்கள் காது கேட்காதவர்கள், கை கால் முடமானவர்கள் பயன்படுத்தி அரசின் வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர். ஆனால், அதே ஊனமுற்றோர் பட்டியலில் உள்ள தொழுநோயாளிகளுக்கு நோயைக் காரணம் காட்டி வேலையை பறிக்கிறது சட்டம். விவாகரத்து பெற வழிவகை செய்கிறது. தொழுநோயாளி உள்ளாட்சிப் பதவிகளில் இருந்தால் பதவி பறிக்கப்படுகிறது.

 

ஐந்தறிவு படைத்த விலங்குகளான செல்லப்பிராணிகளுக்கு நாம் வழங்கும் ஆதரவு, அரவணைப்பு, ஆறறிவு படைத்த சக மனிதர்களான இந்த தொழுநோயாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. நாடு முழுவதும் சகிப்பின்மை குறித்து வாய்ஜாலம் பேசும் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், கலை – கலாச்சார நிபுணர்கள், மனித உரிமை

 

ஆர்வலர்கள், உறுசிதைந்த தொழுநோய் மாற்றுத் திறனாளிகளை சக கூட மதிப்பதில்லை. அவர்கள் ஏதோ செய்யக்கூடாத பாவங்களையெல்லாம் விளைவாக இந்த நோயை பெற்றிருப்பதாக பேசி, இழிபிறவிகளாக நடத்துகின்ற கொடூரம் இன்றளவும் தொடர்கின்றது. இந்த நோயாளிகளை ஓரங்கட்டி வஞ்சிக்கும் கொடுமை காலம்காலமாய் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த அநியாயங்களை கண்டு மனதில் சிறிதளவேனும் இரக்கம் பிறந்து அவர்களையும் சகமனிதனாக எண்ணுகிற நிலையை ஒவ்வொருவர் மனதிலும் விதைப்போம்.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைபுரிய விரும்புகிறவர்கள் சென்னை ராமகிருஷ்ண மடம், சேவாபாரதி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைத் தொடர்புகொள்ளவும்.

 

 

குஷ்டரோகி என்னும் வார்த்தையே துர்நாற்றத்தைத் தருகிறது. மத்திய ஆப்பிரிக்காவுக்கு அடுத்தாற்போல ஒருக்கால் இந்தியாவே தொழுநோயாளிகளின் இல்லமாக இருக்கக் கூடும். இருப்பினும், நம்மிடையே மிக உயர்ந்தவர்கள் எப்படி நம்மில் ஒருவரோ அப்படியேதான் குஷ்டரோகிகளும் நம்மைச் சார்ந்தவர்களே. உயர்ந்த மனிதர்கள் மற்றவர்களின் கவனத்துக்கு ஏங்கி நிற்பவர்கள் அல்ல என்றபோதிலும், நம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்கள். ஆனால், விசேஷமாகக் கவனிக்கப்படவேண்டிய குஷ்டரோகிகளோ மனமறிந்து ஒதுக்கப்படுகிறார்கள். இதயமற்ற செயல் என்றே இதனைக் குறிப்பிடத் தோன்றுகிறது”

மகாத்மா காந்தி

 

 

 

சேவா ரத்தினங்கள்

தொழுநோய் ஒழிப்பில் மிஷனரிகள் மட்டுமே ஈடுபடுகின்றனர் என்ற பொய் பிரச்சாரத்தையும் மீறி பல்வேறு டாக்டர்களும் இந்த தொழுநோய் ஒழிப்பில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர்.

த தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தொழுநோய் ஒழிப்பில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு வெளியில் தெரியாமலேயே செயலாற்றியவர் மறைந்த கங்காதர சர்மா. இவர் சென்னை தாம்பரம் அகஸ்தியர் தெருவில் வசித்து வந்தார். தாம்பரம் ஹிந்துமிஷன் ஆஸ்பத்திரியை நிறுவி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் சென்று தொழுநோய் ஒழிப்பில் ஆர்வம் செலுத்தினார்.

தமிழக அரசின் துணை இயக்குனராக இருந்து இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

த சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசனும் அவரைப் போன்றே தொழுநோய் ஒழிப்பில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். இதற்கென மத்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்றுள்ள, இவர் சமீபத்தில் காலமானார்.

த அண்ணாநகரைச் சேர்ந்த டாக்டர் சுகுமாரன் மிகவும் எளிமைனையானவர். தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தொழுநோயாளி மறுவாழ்வு மையத்தில் பணிபுரிந்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்டு கை கால்கள் முடங்கியவர்களுக்கு பிலாஸ்டிக் சர்ஜரி மூலம் தீர்வு கண்டவர்.

 

சேவா பாரதி

நாடு முழுவதும் ஒன்றாரை லட்சத்திற்கும் மேல் சேவாகாரியங்களை நடத்திவரும் சேவாபாரதி தொழுநோயாளிகளின் நலனுக்காக 7 மையங்களை நடத்திவருகிறது. நேதாஜியின் தனி டாக்டர் டி.எஸ். ராஜூ என்பவர் நிறுவிய ஒரு மையம் குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் உள்ள ராஜமகேந்திரபுரம் (ராஜமுந்திரி) நகரில் உள்ள இந்த மையம் 1982ல் ஆர்.எஸ்.எஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அது முதல் ஆர்.எஸ்.எஸ் – சேவாபாரதி ஊழியர்கள் இதை நிர்வகித்து வருகிறார்கள். இங்கு 106 பிணியாளர்கள் மருத்துவ உதவி, மறுவாழ்வு உதவிகள் பெறுகிறார்கள். 11 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மையத்தில் ஒரு கோசாலையும் நடைபெறுகிறது. பிணியாளர்கள் பயன்பெறும் வகையில் ஒரு மருத்துவமனையும் நூலகம் ஒன்றும் இதன் அங்கம்.

தன்னை சந்திக்க வந்த உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளிடம் அன்றைய பாரத குடியரசு தலைவர் அப்துல்கலாம் தேசத்தில் தொழுநோயாளிகளின் 700 காலனிகள் இருப்பது குறித்து கவலை தெரிவித்தார். அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று கருத்து வெளியிட்டார். பின்னர் தொழுநோயாளிகள் மறுவாழ்வு பற்றி கலாம் ஒரு ஆய்வறிக்கை தயார் செய்தார். அதில் சேவாபாரதியின் தொழுநோய் பிணியாளர்களுக்கான தொண்டு குறித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

 

சதிகார சட்டங்கள்

1955ம் வருடத்திய ஹிந்து திருமணச் சட்டத்தில் சிகிச்சையினால் பயனில்லாத தொழுநோயாளி, கணவனையோ, மனைவியையோ விவாகரத்து கோரும்படியான காரணங்களில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.

1956ம் வருடத்திய இந்து சுவீகார மற்றும் ஜீவனாம்சச் சட்டத்திலும் தொழுநோயாளியான கணவனைத் தள்ளி வைத்துத் தனியாக வாழவும், அந்தக் கணவனிடமே ஜீவனாம்சம் கோரவும் மனைவிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொழுநோயாளிகள் ரயில் பயணம், 1989ம் வருடத்திய இந்திய ரயில்வே சட்டத்தின்படியும், பேருந்துகளில் பயணம் 1988ம் வருடத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படியும் தடைசெய்யப்பட்டன.

1995ல் கொண்டுவரப்பட்ட ஊனமுன்றோர் (சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழுப் பங்காற்றும்) சட்டத்தின் 2(1) (டிடிடி) பிரிவில் ‘குணப்படுத்தப்பட்ட தொழுநோயாளி’ மட்டுமே ஊனமுற்றோர் என்ற வரையறைக்கு உட்படுத்தப்பட்டனர்.

2000-ம் வருடத்திய ‘இளம் குற்றவாளிகளுக்கான நீதி (குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு)’ சட்டத்திலும் பிரிவு 48-ல் தொழுநோயுள்ள இளம் சிறார்களைத் தனிமைப்படுத்தி வைக்கச் சட்டம் வழிவகுத்துள்ளது. உயிர் காப்பீட்டுக் கழகமும், இந்த நோயாளிகளைக் காப்பீடு செய்யும்போது அவர்களது வாழ்வுக் காலத்தைக் குறைத்து மதிப்பிடுவது முறைகேடானது.

2008-ல் ஒடிஷா மாநிலத்தில் மாநகராட்சி ஒன்றில் போடியிட்ட வேட்பாளர் தொழுநோயாளி என்ற காரணத்தால், தகுதியிழப்பு செய்யப்பட்டார். தீரேந்திர பந்துவா என்பவர் அந்த நகராட்சிச் சட்டத்தின் தகுதிழியப்புப் பிரிவுகளை எதிர்த்துப் போட்ட வழக்கை 2008ல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அத்தகைய தகுதிழப்பை நியாயப்படுத்தியது.

 

தொழுநோய் அறிகுறிகள்

சிவந்த வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல் தொழுநோயின் ஆரம்ப அறிகுறி.

கூட்டுமருந்து சிகிச்சை தொழுநோயை குறுகிய காலத்தில் குணப்படுத்தும்.

ஆரம்ப நிலை சிகிச்சை உடல் ஊனம் வராமல் தடுக்கும்.

 

நெட்வொர்க் தேவை நேயர்களே!

தொழுநோயாளிகளுக்கு சேவை செய்யும் அமைப்புகள், அவர்களுக்கு தெம்பு தரப் பேசும் ஏற்பாடு, மறுவாழ்வு, மருத்துவம்… என எத்தனையோ தகவல்கள் பரிமாறிக் கொள்ள ‘நெட்வொர்க்’ எற்பாடு அவசியம் என்று உணரப்பட்டுள்ளது. இது பற்றி கூடுதல் விவரங்கள் விரைவில் கிடைக்கும்.

 

அகிலபாரதிய குஷ்ட நிவாரக சங்கத்தின் சதாசிவ கத்ரே

பிறிதின் நோய் தன் நோய் போல் உணர்ந்தவர்

தேசம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு மாவீரர் சதாசிவ கத்ரே. இவர் எந்தப் போருக்கும் போய் சண்டையிட்டதில்லை. தன் உடலுக்கு வந்த தொழுநோயால் துவண்டுவிடாமல், அந்த உடல் வக்கிரத்தைப் பார்த்து தன்னை உதறித்தள்ளிய சொந்த பந்தங்கள் கண்டு நொறுங்கிப் போகாமல், தனது வாழ்நாள் சேமிப்பு பறிக்கப்பட்டு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது கண்டு சோர்ந்துவிடாமல், வாழ்ந்துகாட்டியது மட்டுமல்ல, சதாசிவ கத்ரே தன் போன்று தொழுநோயாளிகளுக்கு அடைக்கலம் தந்து, மருத்துவம் செய்து மறுவாழ்வு காட்டி மகத்தான தெம்புடன் வாழ்ந்து மறைந்தார்.

சாதாரண பள்ளி ஆசிரியராக இருந்த சதாசிவம் திடீரென ஒருநாள் தனக்கு தொழுநோய் கண்டிருப்பது கண்டு திடுக்கிட்டார். அதன் பிறகு வாழ்க்கை இருண்டுபோகும் என்று எல்லோரும் நினைப்பதுபோல் இவரும் நினைத்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதத் தலைவர் ஸ்ரீ குருஜி கோல்வல்கர் சொன்ன ஒரு வாக்கியம் இவரை வாழ்நாளில் சாதனையாளர் ஆக்கியது. கடவுள் நம்மை சோதிக்கிறார், நாம் ஜெயித்தாக வேண்டும்” என்பதுதான் அந்த வாக்கியம்.

தற்போதைய சத்தீஸ்கர் மாநிலத்தில் சாம்பா கிராமத்தில் ஒரு பகுதிக்கு இன்று கத்ரே நகர் என்று பெயர் உள்ளது என்றால் சும்மா அல்ல. பிறிதின் நோய் தன் நோய் போல் உணர்ந்து சேவை என்னும் யுத்தத்தைத் தொடங்கி வெற்றியும் பெற்றார் சதாசிவ கத்ரே என்பதுதான் காரணம். அவர் தொடங்கிய பணி இன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றுக்கணக்கான நற்பணிகளில் ஒன்றாக ‘பாரதிய குஷ்ட நிவாரக சங்கம்’ என்ற பெயரில் தொடர்கிறது.

 

ஆன்மிகம் அரவணைக்கிறது

இரா. சிவா, ஓய்வுபெற்ற அரசு தொழுநோய் ஆய்வாளர். தனது பணிக்காலத்தின் போதும் பணி ஓய்வுக்குப் பின்பும் தொழுநோயாளிகளுக்கு சேவை செய்பவர். சென்னை ராமகிருஷ்ண மடத்தில் இயங்கும் மருத்துவமனையின் ஒரு பிரிவான தொழுநோய் மருத்துவ சிகிச்சை மையத்தில் இணைந்து பணிபுரிந்து வருகிறார். கடந்த 1988 முதல் தொழுநோயாளிகளுக்கான சேவையில் இருந்துவருகிறார். தொழுநோயிலிருந்து மீண்டவர்கள் சொந்தக்காலில் நின்று வாழ வழிவகை செய்கின்ற ஒரு அமைப்பு சென்னை ராமகிருஷ்ண மடத்தின் ஒரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. அமரர் பூஜனீய ஸ்வாமி தபஸ்யானந்த மகராஜ் அவர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவைக்கு வயது 28. சிவா, ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற பயிற்சியே இத்தகைய சேவை செய்ய வைத்தது என்கிறார். இவர் உறவினர்களால் கைவிடப்பட்ட 105 தொழுநோய் மாற்றுத் திறனாளிக்கு அவரவர் மத சம்பிரதாயத்தின்படி இறுதிக் கடன்கள் செய்துள்ளார்.

12 சுய உதவிக் குழுக்கள் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வணிக வழிவகைகளும் செய்துகொடுத்து மனிதனாக வாழ ஏற்பாடு செய்கிறார்கள் மடத்து அன்பர்கள். இதன் மூலம் 1,350 தொழுநோயாளிகள் பயன்பெறுகிறார்கள். சிறப்பு சுயஉதவி குழுக்கள் மூலம் 10 ஆண்டுகளில் 15 லட்சம் ரூபாயை அவர்கள் சேமித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டின் ஈவுத் தொகை மட்டுமே ஒரு லட்ச ரூபாயை எட்டியுள்ளது. அதையும் அவர்களுக்கே திரும்ப கொடுத்திருக்கிறது ராமகிருஷ்ண மடம்.

கிங் ஆராய்ச்சி – நோய் தடுப்பு நிலையம் மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ‘ஆம்னியான்’ (பிரசவத்திற்குப் பின் தூக்கியெறியப்படும் பன்னீர் குடத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் மெல்லிய ஜவ்வு படலம்) சிகிச்சை மற்றும் கொலாஜன் என்ற புரத படர்வினைக் கொண்டு 35 ஆண்டுகளாக ஆறாத புண்கள் கூட ஆற்றப்பட்டுள்ளன. மடத்தின் இந்த அரும்பணியில் மருந்துவர்கள் குணசேகரன், ஜெய்குமார், செல்லம்மாள், சுப்பிரமணிய பாரதி, கணபதி போன்றவர்கள், விஞ்ஞானிகள், தொழுநோய்த்துறையிலிருந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள், பிற தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தொழுநோயாளிகள் சேவையில் ராமகிருஷ்ண மடம்

சென்னையில் இதுவரை 1,350 மாற்றுத்திறனாளிகளை கண்டுபிடித்து மிக குறைந்த செலவில் மறுவாழ்வுப் பணியை மேற்கொண்டதன் காரணமாக தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் தெருக்களில் பிச்சைக்காரர்களாக ஆகாமல் தடுக்கப்பட்டுள்ளது.

வீடு கிடைக்காமல் அவதியுறும் மக்களுக்கு தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செம்மஞ்சேரியில் பத்து வீடுகள் கிடைத்துள்ளது.

வருடா வருடம் ஜனவரி 30ம் தேதியன்று உலகத் தொழுநோய் தினமாகக் கொண்டாடி வருகிறது. அன்று பொருளாதார உதவிகளும் அளித்து வருகிறது.

செங்கல்பட்டு – திருமணி என்ற இடத்தில் உள்ள தொழுநோய் இல்லத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது. குடிக்கத் தண்ணீர்கூட இல்லாத நிலையில் ஆழ்குழாய் கிணறும், வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் செங்கல்பட்டு ராமகிருஷ்ண மடத்தின் மூலமாக நல்ல சத்தான உணவும் வழங்கப்படுகிறது. துளசி டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் தினசரி காய்கறி வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரத்திலுள்ள ராமகிருஷ்ணமடத்தின் மூலம் ஞாயிற்றுக்கிழமை தோறும் புண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதிய உணவு வழங்கப்பட்டு போக்குவரத்துச் செலவுக்கு பணமும் வழங்கப்படுகிறது.

சென்னை, சுற்றுபுறத்திலுள்ள ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு சத்தான உணவு கிடைக்க ஆவன செய்தல், தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை கண்டுபிடித்து அவர்களைக் கொண்டே புண்களுக்கு சிகிச்சை அளித்தல்.

 

சென்னை ராமகிருஷ்ண மடத்தினர் நடத்தும் தொழுநோயாளிகள் சேவை பணியில் தொண்டர்கள்

(இ-வ) காயத்ரி, நாராயணன், இரா. சிவா, தெய்வசிகாமணி, சந்திரன் செட்டி, துரைசாமி