ஆப்பிள் தந்தார், ஆன்மிகம் கொண்டார்

ஆப்பிள் பழத்தின் பாரத தரிசனத்திற்கு 100 வயது

ஆப்பிள் தந்தார், ஆன்மிகம் கொண்டார்

மெரிக்காவில் ஒரு சிறு நகரம். அங்கு லிப்ட் (எலிவேட்டர்) தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் வீடு. மகனைப் பற்றி நிறுவன உரிமையாளரும் அவர் மனைவியும் கவலையோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்துவீட்டு டாக்டர் தம்பதி தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதில் காட்டுகிற ஆர்வத்தைப் பார்த்து நம்ம பையனும் அவர்களைப் போலவே ஆகிவிட ஆசைப்படுகிறான் என்றார் கணவர். ஆனால் அவன் அந்த டாக்டர் தம்பதி போல இந்தியாவுக்குப் போய் சேவைசெய்யவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறானே என்று மனைவி நொந்துகொண்டார். (பின்னாளில் அந்த குடும்பத்தின் நிறுவனத்தை ஓட்டீஸ் கம்பெனி வாங்கியது).

சாமுவேல் இவான் ஸ்டோக்ஸ் என்ற அந்த 21 வயது மகன் இந்தியாவுக்குப் போக கப்பல் ஏறிவிட்டான். பெற்றோரும் அரைமனதோடு வாழ்த்தி அனுப்பினார்கள்.

பம்பாயில் வந்து இறங்கிய ஸ்டோக்ஸ் இந்திய வெய்யிலில் சுருண்டுவிட்டான். எனவே, ஓய்வுக்காக சிம்லாவில் உள்ள தானேதார் என்ற சிற்றூருக்கு அனுப்பப்பட்டான். அங்கு ஒரு சர்ச்சில் தங்கவைக்கப்பட்டான்.appele

ஓய்வுக்காக வந்தவனை ஒரேயடியாக வளைத்துப் போட்டுக் கொண்டுவிட்டது அந்த சுற்றூரின் ரம்யமான பசுமை. அதுவும் தவிர ஏராளமான சாதுக்கள், கைலாஸ் மானசரோவர் யாத்திரை செல்வதை அலுக்காமல் சலிக்காமல் பார்த்துக்கொண்டிருப்பான். சர்ச் பாதிரி நடத்திய படாடோப வாழ்க்கையும்  ஹிந்து சாதுக்களின் பரிபூரண எளிமையும் ஸ்டோக்ஸ் மனதில் வேலைசெய்ய ஆரம்பித்தன.

இதற்கிடையில் அவனது அம்மா பிறந்தநாள் பரிசாக ஆப்பிள் மரக்கன்றுகளை அனுப்பிவைத்திருந்தார். ஸ்டோக்ஸ் அவற்றை தானேதார் கிராமத்தில் ஒருபுறமாக நட்டுவைத்தான். அது 1916. அதாவது ஆப்பிள் பாரத நாட்டில் அடியெடுத்து வைத்தது சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன். (ஒரு வெள்ளைக்கார ராணுவ அதிகாரி அதற்கு முன்பு கொண்டுவந்த ஆப்பிள் மரக்கன்று மூலம் கிடைத்த பழங்கள் கசப்பு ரகம். அதை யாரும் விரும்பவில்லை. எனவே ஜப்பானிலிருந்து ஆப்பிள் இறக்குமதி ஆகிக்கொண்டிருந்தது.) ஸ்டோக்ஸ் நட்ட ஆப்பிள் மரம் 1926ல் பழம் கொடுக்க ஆரம்பித்தது. அதன் இனிப்பு அபாரமாக இருந்தது. ஜப்பானியஆப்பிள் இறக்குமதி நிறுத்தப்பட்டது.

அவன் மனதில் சாதுக்களின் பக்தி விஸ்வரூபம் எடுத்தது. மெல்ல மெல்ல பகவத் கீதை, உபநிடதம் இவற்றை ஆங்கிலத்தில் படித்தான். அவனது கவனம் ஹிந்துத்துவத்தின் பால் திரும்பியது. கீதையைப் புரிந்துகொள்ள சம்ஸ்கிருதம் கற்றான். ஆண்டுகள் ஓடின.

1932ல் அவன் ஆர்ய சமாஜத்தில் இணைந்தான். சத்யானந்தர் என்று பெயர் சூட்டிக்கொண்டான். தானேதார் கிராமத்தில் மரத்தாலும் கல்லாலும் இழைத்து ஒரு கோயிலைக் கட்டினான். கோயிலின் சுவர்களில் கீதை, உபநிடத வரிகளைப் பொறிக்கச் செய்தான்.

ஆப்பிளை பாரதத்திற்கு அறிமுகப்படுத்திய கையோடு, பாரதத்தின் ஹிந்துத்துவத்தை தனக்குள் அறிமுகப்படுத்திக்கொண்டு துறவியான அந்த அமெரிக்க இளைஞனின் நினைவாக இன்றும் அந்த கோயில் அங்கு தென்படுகிறது.

சத்யானந்தர் 1946 மே 14 அன்று காலமானார்.